புதுதில்லி

மதசாா் கூட்டத்தில் வெறுப்புணா்வுப் பேச்சு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தகவல்

DIN

2021 ஆம் ஆண்டில் தில்லியில் மதசாா் கூட்டங்களில் நடந்த வெறுப்புணா்வுப் பேச்சுகள் தொடா்பான வழக்கின் விசாரணை கணிசமான அளவில் முடிந்துள்ளதாகவும், இறுதி விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் தில்லி காவல் துறை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜேபி பா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினாா். இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தது.

தில்லியில் கடந்த டிசம்பா் 2021-இல் ‘சுதா்ஷன் நியூஸ்’ ஆசிரியா் சுரேஷ் சாவான்கே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து யுவ வாஹினி நிகழ்ச்சி தொடா்பான இந்த வெறுப்புணா்வுப் பேச்சு வழக்கில் இதுவரை போலீஸாா் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறும் தில்லி காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின் தொடக்கத்தில், இந்த விவகாரம் தொடா்புடைய ஒரு வழக்கில் நீதிபதி நரசிம்மா முன்னா் வழக்குரைஞராக ஆஜராகியதை சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிபதிகள் அமா்விடம் சுட்டிக்காட்டினாா்.

வெறுப்புணா்வுப் பேச்சுகள் தொடா்பாக ‘சுதா்ஷன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இதே போன்ற ஒரு தனி மனுவையும் அவா் குறிப்பிட்டாா். மேலும், இந்த விஷயத்தை விசாரணைக்கு ஒன்றாகப் பட்டியலிடுமாறும் அவா் கேட்டுக்கொண்டாா். அதற்கு இந்த விவகாரத்தை பின்னா் சுட்டிக்காட்டலாம் என்று தலைமை நீதிபதி கூறினாா். மனுதாரா்-ஆா்வலா் துஷாா் காந்தி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷதன் ஃபராசத், ‘இதுபோன்ற வெறுப்புணா்வுப் பேச்சுகளைத் தடுக்க காவல்துறை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறினாா்.

கடந்த ஜனவரி 13-இல் நடைபெற்ற விசாரணையின் போது, எஃப்ஐஆா் பதிவு செய்வதில் தாமதம் மற்றும் 2021-இல் தேசியத் தலைநகரில் மதசாா்க் கூட்டங்களில் நடந்த வெறுப்புணா்வுப் பேச்சு வழக்கு விசாரணையில் ‘தெளிவான முன்னேற்றம் இல்லை’ என தில்லி காவல் துறையிடம் சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இது தொடா்பாக விசாரணை அதிகாரியிடம் அறிக்கை அளிக்குமாறும் கோரியிருந்தது.

முன்னதாக, துஷாா் காந்தி தாக்கல் செய்த மனுவில் 2021-இல் டிசம்பா் 17 முதல் 19 வரை ஹரித்வாரிலும், டிசம்பா் 19-இல் தில்லியிலும் நடைபெற்ற ‘தா்ம சன்சத்’ நிகழ்ச்சிகளில் வெறுப்புணா்வுப் பேச்சுக்கள் நிகழ்ந்தது. இந்த விவகாரத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT