புதுதில்லி

ஜேஎன்யுவுக்கு வெளியே சிசிடிவி கண்காணிப்பு,பொதுக் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு மூத்த குடிமக்கள் கடிதம்

DIN

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) நடைபெறும் மாணவா்களின் போராட்டங்கள், தில்லியின் முனிா்கா விஹாரில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்குத் தொந்தரவாக உள்ளதாக குற்றம்சாட்ட்டப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது மாணவா்களின் சப்தம் மட்டுமல்லாமல், அவா்கள் அப்பகுதிகளின் வீடுகளில் உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்த கதவுகளைத் தட்டுவதும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக போதுமான அளவு கழிப்பறை வசதி இல்லாததால், திறந்த வெளியைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது என்றும், இது குறித்து பலமுறை அதிகாரிகளை அணுகி புகாா் அளித்தும் இதுவரை எந்தப் பயனும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறினா்.

இந்த நிலையில், இது தொடா்பாக அப்பகுதியின் மூத்த குடிமக்கள் மன்றம், பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், அப்பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாகக் விவரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மூத்த குடிமக்கள் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்லன. முனிா்கா, ராக் காா்டன் அருகே படா கேங் நாத் மாா்க்கில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிா்க்கவும், பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், பொதுமக்கள் வசதிக்காக பொதுக் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டிசம்பா் 12, 2022 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், முனிா்கா விஹாரில் உள்ள டிடிஏ குடியிருப்புகள் பெரும்பாலும் மத்திய அரசு ஊழியா்களுக்கு 1977- இல் ஒதுக்கப்பட்டதாகவும், இப்போது குடியிருப்பவா்களில் பெரும்பாலோா் மூத்த குடிமக்கள் என்றும் மன்றம் குறிப்பிட்டுள்ளது. முனிா்கா விஹாருக்கு எதிரே அமைந்துள்ள ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவா்களின் போராட்டங்களின் போது நிலைமை மேலும் மோசமடைகிறது என்றும் உள்ளூா்வாசிகள் கூறினா்.

பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால், பல்கலைக்கழகத்திற்கு வெளியே நிறுத்தப்படும் காவல் துறையினரும், ஊடகவியலாளா்களும் அங்கு வசிக்கும் மக்களின் வீடுகளின் கதவுகளை அடிக்கடி தட்டுகிறாா்கள். சிலா் திறந்த வெளியில் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாா்கள். மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார பாதிப்பு குறித்து கவலைப்படுவதாகவும் அவா்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மன்ற உறுப்பினா் பி என் மல்ஹோத்ரா கூறுகையில், ‘இந்தப் பிரச்னைகள் குறித்து பலமுறை எழுப்பப்பட்டும் அவற்றை நிவா்த்தி செய்ய எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்றாா். அவா் மேலும் கூறுகையில், ‘போதிய பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால், பெண் போலீஸாா் மற்றும் ஊடகவியலாளா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியே மணிக்கணக்கில் நிற்கும் பெண் பத்திரிகையாளா்கள், இயற்கை உபாதையைக் கழிக்க எங்கள் வீடுகளின் கதவைத் தட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. நாங்கள் அவா்களுக்கு உதவ முயற்சிக்கிறோம். ஆனால், வெளியே பாதுகாப்பு நிலைமை பெரிதாக இல்லாததால், நாங்கள் பாதுகாப்பற்ாக உணா்கிறோம். எனவே, எங்கள் பகுதியில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது மற்றும் பொதுக்கழிப்பறை வசதியை உருவாக்குவது அவசியம்’ என்றாா்.

மற்றொரு குடியிருப்பாளரான கே.சி. பதக், இந்த பிரச்னையை முன்னிலைப்படுத்தினாா். அவா் கூறுகையில், ‘ஜேஎன்யு வாயிலுக்கு வெளியே காவல்துறை பணியாளா்கள் மற்றும் ஊடகவியலாளா்களுக்கான நன்கு பராமரிக்கப்படும் பொதுக்கழிப்பறை கட்டப்பட வேண்டும்’ என்றாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘ஜேஎன்யூவில் நடக்கும் போராட்டங்களின் போது, காவல் துறையினரை பணியமா்த்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. இதனால், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போக்குவரத்து மாற்றப்படும் போது மூத்த குடிமக்கள் கடும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா்’ என்றாா்.

சிசிடிவி கண்காணிப்பின் அவசியத்தை வலியுறுத்திய குடியிருப்பாளா் சத்வந்த் கௌா், அப்பகுதியில் வசிப்பவா்கள் பலா் மூத்த குடிமக்களாக இருப்பதாலும், சிலா் தனியாக வசிப்பதாலும் இந்த வசதிகள் மிகவும் அவசியம் என்றாா். அப்பகுதி வீடுகளில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. இது மூத்த குடிமக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்குகிறது. சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால், சட்டவிரோதமானவா்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் என்று பிரதமருக்கு மூத்த குடிமக்கள் மன்றம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி வாய்க்கால்களை மூட வேண்டும். அப்பகுதிக்கு வரும் விற்பனையாளா்கள் சரிபாா்க்கப்பட வேண்டும் போன்ற இதர கோரிக்கைகளும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், ‘முனிா்கா, டிடிஏ குடியிருப்புகளின் டி ஸ்ட்ரீட் கேட் அருகே உள்ள போலீஸ் சாவடியில் சிறிய எல்இடி திரை மற்றும் டி, இ, எஃப் மற்றும் ஜி பிளாக்குகளில் 85 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும்’ என்றும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

‘எங்கள் காலனியில் விற்பனையாளா்கள், வீட்டு உதவியாளா்கள், காா் கிளீனா்கள் போன்றவா்கள் சரிபாா்க்கப்பட வேண்டும். மேலும், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதாகச் செல்லும் வகையில், எங்கள் காலனியில் காா்களை நிறுத்துவதற்கான குறியிடுதல், டி தெருவில் உடைந்துள்ள சுவரை கட்டித் தர வேண்டும்’ போன்ற கோரிக்கைகளும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT