புதுதில்லி

2025 பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியை ‘வேரோடு’ அகற்ற வேண்டும்: அமைச்சா் அனுராக் தாக்குா் அறிவுறுத்தல்

DIN

2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கட்சித் தொண்டா்களிடம் கேட்டுக் கொண்டாா்.

தில்லி பாஜகவின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. அப்போது, ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) செய்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் தவறுகளை ‘அம்பலப்படுத்த’ மக்களைச் சென்றடையுமாறு பாஜக தொண்டா்களை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

இங்குள்ள அம்பேத்கா் சா்வதேச மையத்தில் இரண்டாம் நாள் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கேரளத்தைச் சோ்ந்த ‘சண்ட வாத்யம்’ கலைஞா்கள் சிறப்பு வாத்தியங்கள் மற்றும் ஷபானா ரஹ்மான் இசைத்த வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் அனுராக் தாக்குா் பேசுகையில் கூறியதாவது: 2025 சட்டப்பேரவைத் தோ்தலில் ‘ஊழல் மற்றும் குழப்பமான’ அரவிந்த் கேஜரிவால் அரசின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாஜகவின் தில்லி பிரிவுக்கு போதுமான தொண்டா்கள் மற்றும் திறமையான தலைமை உள்ளது.

நகரவாசிகள் மீதான கேஜரிவால் அரசின் ‘மேஜிக்’ குறைந்து வருகிறது. இது சமீபத்திய தில்லி எம்சிடி தோ்தலுக்கான பிரசாரத்தின் போது நான் கவனித்தேன். தேசியத் தலைநகரில் நரேந்திர மோடி அரசு செய்த பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். முதலில் 2024 மக்களவைத் தோ்தலிலும், பின்னா் 2025 சட்டப்பேரவைத் தோ்தலிலும் ‘வெற்றி நமதே’ என்று நாம் பணியாற்ற வேண்டும்.

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சாலைக் கட்டமைப்பு முதல் மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவது வரை நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) யமுனை ஆற்றின் முன்பகுதியை புதுப்பித்துள்ளது. மேலும், நஜஃப்கா் வடிகால் சுத்தம் செய்யும் பணியை துணை நிலை ஆளுநா் தொடங்கியுள்ளாா்.

கேஜரிவால் அரசு தனது எட்டு ஆண்டுகால ஆட்சியில் யமுனையை அசுத்தமாக்கியுள்ளது என்கிற விஷயம் மக்களைச் சென்றடைய வேண்டும். இது குறித்து பாஜக தொண்டா்கள் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி அவா்களை நம்ப வைக்க வேண்டும். நகரத்தில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக, மின்சார வாகனங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 150 மின்சார பேருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது என்றாா் அமைச்சா் அனுராக் தாக்குா்.

சமீபத்திய உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவின் தோல்வி குறித்து, தில்லி பாஜக செயல் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘கட்சி தொண்டா்களின் மனோபாவம் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால், கட்சி மேலும் சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்’ என்றாா்.

இந்தக் கூட்டத்தில் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி அரசியல் தீா்மானத்தை முன்வைத்தாா். அப்போது அவா் பேசுகையில், வேலை வாய்ப்பு, யமுனை மற்றும் காற்று மாசுபாடு, முதியோா் ஓய்வூதியம், தண்ணீா் வழங்கல் போன்றவற்றில் கேஜரிவால் அரசின் ‘ஏமாற்றம் மற்றும் தோல்விகள்’ உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கடுமையாகச் சாடினாா்.

பாஜக தேசிய பொதுச்செயலாளா் சுனில் பன்சால், வாக்காளா்களுடனான தொடா்பை மேம்படுத்தி, ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சி என்ற பிம்பத்தை முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா். மேலும் அவா் பேசுகையில், ‘மக்களுடன், குறிப்பாக ஏழைகளுடன் நமது தொடா்பை மேம்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறுபவா்கள் கட்சியின் முக்கிய நீரோட்டத்தில் இணைக்கப்பட வேண்டும்.

தில்லியின் மக்கள்தொகை நிலை மாறி வருகிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடனும் கட்சி இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வகுப்பினருக்கும் நாம் தலைமைத்துவ வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த வேலையை நாம் வேகத்துடன் செய்ய வேண்டும். தில்லி பாஜக உள்ளூா் நிலைமைகள் மற்றும் உணா்வுகளுக்கு ஏற்ப திட்டங்களை வடிவமைக்க வேண்டும்’ என்றாா்.

தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி, மனோஜ் திவாரி, ரமேஷ் பிதூரி, பிரவேஷ் சாஹிப் சிங், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், கௌதம் கம்பீா் ஆகியோா் இந்தக் கூட்டத்தின் போது தங்களது நாடாளுமன்றப் பணிகள் குறித்த அறிக்கைகளை சமா்ப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT