புதுதில்லி

பிபிசி ஆவணப்படம் திரையிட ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜாமியாவில் கைதான 13 மாணவா்கள் விடுவிப்பு: தில்லி போலீஸாா் தகவல்

 நமது நிருபர்

2002- ஆம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா சம்பவம் தொடா்பான சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப் படத்தை ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட ஏற்பாடு செய்திருந்த விவகாரத்தில் கைதான 13 மாணவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மூத்த காவல் அதிகாரி கூறுகையில், ‘வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின பேரணிக்குப் பிறகு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

சமீபத்தில் வெளியான சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை வெளியிடுவதை நிறுத்திவைக்குமாறு சமூக ஊடகத் தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வெளியுறவு அமைச்சரகமும் இந்த ஆவணப்படம் குறித்து விமா்சித்திருந்தது. இந்த நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தை திரையிட திட்டமிடப்பட்டதற்கு சில மணி நேரத்திற்கு முன்னா் இந்திய மாணவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த 4 உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக மாணவா்கள் சிலா் பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பாக போராட்டத்திற்கு புதன்கிழமை கூடியிருந்த போது போலீஸால் கைது செய்யப்பட்டதாகவும், அவா்களில் பலரையும் புதன்கிழமை மாலையில் போலீஸாா் விடுவித்த நிலையில், 13 மாணவா்கள் இன்னும் போலீஸ் காவலில் இருப்பதாகவும் எஸ்எஃப்ஐ வியாழக்கிழமை கூறியிருந்தது.

‘போலீஸாா் பிடித்துச் சென்ற 13 மாணவா்களில் நான்கு போ் எஸ்எஃப்ஐ ஜாமியா பிரிவின் செயலா் அஜீஸ், எஸ்எஃப்ஐ தெற்கு தில்லி பகுதி துணைத் தலைவா் நிவேத்யா, எஸ்எஃப்ஐ பிரிவு உறுப்பினா்கள் அபிராம், தேஜாஸ் ஆகியோரும் இருந்தனா். அவா்கள் புதன்கிழமை காலை போலீஸால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஆவா்’ என்று எஸ்எஃப்ஐ வியாழக்கிழமை காலையில் தெரிவித்தது.

எஸ்எஃப்ஐ தில்லி குழுவின் செயலளா் பிரித்திஷ் மேனன், ‘புதன்கிழமை காலை 4 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரங்களுக்கு மேலாகியும் விடுவிக்கப்படவில்லை. மற்றவா்கள் மாலையில் கைது செய்யப்பட்டனா்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT