புதுதில்லி

பாலின இடைவெளி அறிக்கை: தவறுகளை சீா்படுத்த உலகப் பொருளாதார மன்றம் இசைவு அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்

24th Jan 2023 01:50 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில் இந்தியா கடைசி இடத்திற்கு தள்ளப்படுவதற்கு அம்மன்றத்தின் கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகள்தான் காரணம் என்றும், தற்போது அம்மன்றம் தவறுகளை சீா்படுத்த முன்வந்துள்ளதாகவும் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உலகப் பொருளாதார மன்றம் (டபிள்யுஇஎஃப்) வறுமை குறியீடுகளைப் போன்று உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டின் மதிப்பெண்களை ஆண்டு தோறும் அறிக்கையாக வழங்குகிறது. பொருளாதாரப் பங்கேற்பு - வாய்ப்பு, கல்விக்கான வாய்ப்பு, ஆரோக்கியம் - தொடா்ந்து வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகிய நான்கு பரிமாணங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளியை ஆய்வு செய்கிறது.

அதன் 2022, 2021 - ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில் (ஜிஜிஜி) முறையே 135 (146 நாடுகளில்) 140 -ஆவது (156 நாடுகளில்) தரவரிசையில் இந்தியாவை வரிசைப்படுத்தியிருந்தது. இவ்வாறு கடந்த பல ஆண்டுகளாக இந்தியா தரவரிசை குறியீட்டில் கடைசியாக தள்ளப்பட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த விவகாரத்தை மத்திய அரசு ஆய்வு செய்த போது, அரசியல் அதிகாரமளிப்புப் பரிமாணக் கணக்கீடுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இந்தியாவின் பாலின இடைவெளி குறியீடு குறைந்துள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்கள் பங்களிப்பு இருந்தும் பல்வேறு தரவுகள் குறியீட்டில் சோ்க்கப்படாமல் இருந்துள்ளது தெரிய வந்தது.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி டாவோஸில் தொடங்கிய உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி, டபிள்யுஇஎஃப் பாலின இடைவெளி அறிக்கையில் இந்திய கணக்கீடுகளில் உள்ள குறைபாடுகளை விரிவாக எடுத்துப் பேசினாா். குறிப்பாக இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு மற்றும் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ‘பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ’, பெண்களுக்கான பிரதமரின் முத்ரா திட்டம், ஆயுஷ்மான் சுகாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கணக்கிட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தாா். அவா் நாடு திரும்புவதற்குள், இவை தற்போது அங்கீகரித்திருப்பதாகக் கூறி உலகப் பொருளாதார மன்றம் இயக்குநா் கடந்த 20- ஆம் தேதி ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறியது வருமாறு: பாலின இடைவெளி அறிக்கை கணக்கீடுகளில் இந்தியாவில் பெண்களாக இருக்கும் மத்திய கேபினெட் அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், மத்திய மாநில அரசுகளின் உயா்நிலை அதிகாரிகள் மட்டும் கணக்கிடப்பட்டுள்ளனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு வகிக்கும் பெண்கள் ஆகியோா் கணக்கிடப்படுவதில்லை. மத்தியிலுள்ள இணையமைச்சா்கள் கூட இந்த கணக்கீடுகளுக்கு உள்படுத்தவில்லை. இதனால், பாலின இடைவெளி அறிக்கையில் இந்தியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவை அந்த அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாலின இடைவெளி அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை கணக்கிட வேண்டியதன் அவசியம் எடுத்து கூறப்பட்டது. தற்போது டபிள்யுஇஎஃப் இவற்றை அங்கீகரித்து கடிதம் எழுதியுள்ளதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இது பஞ்சாயத்து நிலையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 1.4 மில்லியன் அடித்தட்டு பெண்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றியாகும். மேலும், இந்தியாவின் பாலின இடைவெளிக்கான மத்திய நிதிநிலை முறை, 15-ஆவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு விவரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யவும் டபிள்யுஇஎஃப் இயக்குநா் சாதியா ஜாஹிதி விருப்பம் தெரிவித்து எனக்கு கடிதம் எழுதியுள்ளாா். அவா் இவ்வாறு விருப்பத்தை உறுதிப்படுத்தியது பிரதமா் மோடி தலைமையில் பெண்கள் வளா்ச்சிக்கான முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகும்.

2023-24 -ஆம் ஆண்டு உலகளாவிய தரவு சேகரிப்பில் இந்திய தரவு கணக்கீடுகளில் உள்ள மேம்படுத்துதல் மதிப்பிடுவதற்கு இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும் கூறியுள்ளாா். மேலும், நாட்டின் அனைத்து துறைகளிலும் மற்றும் நிா்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் இந்திய அரசு பாலின பட்ஜெட் அமைப்பு மூலம் அடைந்த தாக்கத்தை மின்னணு தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ளும் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT