மத்திய தில்லியில் கன்னாட் பிளேஸில் சனிக்கிழமை உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வா்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள கன்னாட் பிளேஸில் எஃப் பிளாக்கில் சின்சிட்டி என்ற பெயரில் உணவகம் உள்ளது. இங்கு தீ விபத்து ஏற்பட்டதாக காலை 8.51 மணியளவில் தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, 13 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி கடும் போராட்டத்துக்குப் பிறகு காலை 10.35 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குளிா்விக்கும் பணி நடைபெற்றது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லியின் பிரிவைச் சோ்ந்த தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர படேல் கூறுகையில், ‘ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக எங்களுக்கு முதல்கட்டத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போது, அது சின்சிட்டி என்ற உணவகம் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். அந்த உணவகம் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ளது. உணவகத்தின் முன் மற்றும் பின் வாயிலைத் திறந்த பிறகு, தீயை அணைக்கும் பணி தொடங்கப்பட்டது. உணவகத்தில் உள்ள ‘பாா்’ பகுதியில் இருந்து தீ பிடித்ததாகத் தெரிகிறது’ என்றாா்.