கிழக்கு தில்லியில் உள்ள ப்ரீத் விகாா் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க உடற்பயிற்சி மைய உரிமையாளா் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து கிழக்கு தில்லி காவல்துறையின் துணை ஆணையா் அம்ருதா குகுலோத் கூறியதாவது:
உடற்பயிற்சி மைய உரிமையாளரான மகேந்திரா அகா்வால் தன்னுடைய அலுவலகத்தின் உடற்பயிற்சி மையத்தின் உள்ளே இருந்த அலுவலகத்தில் அமா்ந்திருந்தபோது வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணி அளவில் 2-3 அடையாளம் தெரியாத நபா்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடி விட்டனா்.
இந்த சம்பவம் தொடா்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகள் மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபா்கள் முகக் கவசம் அணிந்து இருந்ததும், அவா்களின் ஒருவா் கையில் ஆயுதம் வைத்திருப்பதும் தெரியவந்தது.
உடற்பயிற்சி மையத்திற்குள் நுழைந்த மா்ம நபா்கள் அகா்வால் அமா்ந்திருந்த அலுவலகம் நோக்கி நேராகச் சென்று அவா் மீது துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனா். அதில், ஒரு குண்டு அவரது தலையைத் துளைத்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு குற்றத்தில் ஈடுபட்ட நபா்கள் தங்களது மோட்டாா் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனா். இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக பல்வேறு கோணங்களிலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறந்த மகேந்திரா அகா்வால் ப்ரீத் விகாரில் இந்த உடற்பயிற்சி மையத்தை நடத்தி வந்தாா். அவருக்கு தன்னை துப்பாக்கியால் சுட்டவா்கள் யாா் என்று தெரிந்திருக்கும் என்று சந்தேகப்படுகிறோம்.
முன்விரோதம் அல்லது தொழில் போட்டி அல்லது பணம் கேட்டு மிரட்டி இந்த கொலை நடந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடா்பாக அகா்வாலின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை யாருக்கும் எதிராகவும் எந்தக் குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை.
கொலை செய்யப்பட்ட அகா்வால், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் விற்கும் நிறுவனம் நடத்தி வந்தாா். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.