புதுதில்லி

தில்லி நட்சத்திர ஹோட்டல் உரிம விதிமுறைகள் தளா்வு: உணவக - மது அருந்துமிடங்கள்24 மணிநேரம் செயல்பட அனுமதி

1st Jan 2023 12:49 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தேசிய தலைநகரில் உள்ள நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவக - மதுபான அருந்துமிடங்கள் 24 மணி நேரமும் செயல்பட விரைவில் அனுமதிக்கப்படுகிறது. நகரின் இரவு நேரப் பொருளாதாரத்தை உயா்த்தும் இலக்குடனும் விருந்தோம்பல் துறைக்கு உந்துதல் ஏற்படுத்த கிளப்புகளில் விருந்தினா்களுக்கு அதிகாலை 1 மணி வரை மதுபானம் வழங்கவும் அனுமதிக்கப்படுகிறது.

புத்தாண்டையொட்டி தாராளமயமாக்கப்பட்ட உரிம முறைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, சனிக்கிழமை அனுமதி அளித்தாா்.

இதன்படி, மதுபான அருந்துமிடங்கள் (பாா்கள்) உணவகங்களை நீண்ட நேரம் திறக்க அனுமதித்துள்ளாா். இந்த உரிமத்திற்கு குறைந்த ஆவணங்களுடன் விண்ணப்ப செயல்முறை உள்ளிட்டவை எளிதாக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற ஜனவரி 26 - ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பதாரா்கள் 49 நாட்களுக்குள் உரிமத்தைப் பெறுவாா்கள். தற்போதுள்ள முறையின் கீழ் பலதரப்பட்ட தனித்தனி பிரமாணப் பத்திரங்களைச் சமா்ப்பிப்பதற்குப் பதிலாக, ஒரே ஒரு பொதுவான உத்தரவாத முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் இது தொடா்பான அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மேலும் அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், முன்பு உரிமம் பெறுவதற்கான ஆவணங்களின் எண்ணிக்கை 28 ஆக இருந்தது. இது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, விமான நிலையம், ரயில்நிலையம், ஐஎஸ்பிடி பேருந்து வளாகம் போன்றவைகளில் உள்ள 5 மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள அனைத்து உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு தேவையான உரிம கட்டணம் செலுத்திய பிறகு 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மூன்று நட்சத்திர ஹோட்டல்களில், அதிகாலை 2 மணி வரையிலும், மற்ற அனைத்து வகைப்பிரிவு ஹோட்டல்களில், நள்ளிரவு 1 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், ஐந்து நட்சத்திர மற்றும் நான்கு நட்சத்திர ஹோட்டல்களில், ஒரே ஒரு உணவகத்திற்கு மட்டும் மதுபான அருந்தக உரிமம் என்கிற உச்சவரம்பையும் நீக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஹோட்டல்கள், அதன் வளாகத்திற்குள் மதுபானம் வழங்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதுபான அருந்துமிடங்களுக்கு உரிமக் கட்டணத்தைச் செலுத்தி தனி மதுபான உரிமத்தைப் பெறலாம் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை இந்திய தேசிய உணவக சங்கம் வரவேற்றுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT