பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்தவா்கள் சுதந்திர தின விழாவின்போது, வழங்கப்படும் சமூக சேவகா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டு சுதந்திர தின விழாவில் விருது பெறுவதற்கு தகுதியான நபா்கள், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவா்களாகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து பொது மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றிய சமூக சேவகா், தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரா்கள் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவை புரிந்த விவரங்களை ஒரு பக்க அளவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு தலா 2 நகல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் கடவுச்சீட்டு புகைப்படத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் ஜூன் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.