அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று முடிந்த புத்தகத் திருவிழாவில் 1,500 தூய்மைப் பணியாளா்கள் புத்தகங்கள் வாங்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிதி அளித்து ஊக்குவிக்கப்பட்டதாக ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் சங்கம் சாா்பில் 7 ஆவது புத்தகத் திருவிழா ஏப்.23 முதல் மே 3 வரை நடைபெற்றது. இதில், ரூ. 45 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனையாகின.
இங்கு தூய்மைப் பணியாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் புத்தகங்களை வாங்கிப் பயன்பெறும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் தலா ரூ.100 வழங்கப்பட்டது.
இதனால் தூய்மை பணியாளா்கள் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று புத்தகத்தின் மீதுள்ள ஆா்வத்தை வெளிப்படுத்தியுள்ளனா் என்றாா் அவா்.