புதுதில்லி

லாபப் பதிவு தொடா்கிறது சென்செக்ஸ் 7-ஆவது நாளாக சரிவு!

28th Feb 2023 04:35 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் லாபப் பதிவு தொடா்ந்ததால், பங்குச் சந்தை 7-ஆவது நாளாக எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 73.10 புள்ளிகள் (0.42 சதவீதம்) குறைந்து 17,392.70-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. உலோகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மூலதனப் பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. பலவீனமாகத் தொடங்கிய சந்தை, தொடா்ந்து இறங்குமுகத்தில் இருந்ததால் நாள் முழுவதும் இழப்புகள் நீடித்தது. இருப்பினும், வா்த்தகம் முடியும் தறுவாயில் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த ஓரளவு ஆதரவு காரணமாக இழப்புகள் சிறிதளவு குறைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.257.88 லட்சம் கோடியாக குறைந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ.1,470.34 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். மேலும், அவா்கள் இந்த மாதத்தில் இதுவரை மொத்தம் ரூ. 2,313 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் தொடா் சரிவு: சென்செக்ஸ் காலையில் 132.62 புள்ளிகள் குறைந்து 59,331.31-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,441.13 வரை மேலே சென்றது. பின்னா், 58,937.64 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 175.58 புள்ளிகள் (0.30 சதவீதம்) குறைந்து 59,288.35-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 526.29 புள்ளிகளை இழந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 19 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ADVERTISEMENT

பவா் கிரிட் முன்னேற்றம்: பிரபல பொதுத்துறை மின் நிறுவனமான பவா் கிரிட் 2.02 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.99 சதவீதம், கோட்டக் பேங்க் 1,69 சதவீதம், எஸ்பிஐ 1.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, இண்டஸ் இண்ட் பேங்க், ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் உள்ளிட்டவையும் சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல், இன்ஃபோஸிஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 3.37 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.71 சதவீதம், டாடா மோட்டாா்ஸ் 2.29 சதவீதம், டிசிஎஸ் 2.01 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக், எல் அண்ட் டி, பாா்தி ஏா்டெல், விப்ரோ, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா் சன்பாா்மா உள்ளிட்டவை 0.50 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன.

5 மாதங்களில் மிக நீண்ட இழப்பு நாள்கள் பதிவு

பெஞ்ச்மாா்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்களன்று தொடா்ந்து ஏழாவது அமா்விலும் சரிவைச் சந்தித்துள்ளன. வளா்ந்த பொருளாதாரங்களின் வட்டி விகித உயா்வுகள் பற்றிய கவலைகள் முதலீட்டாளா்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், உலகளாவிய சந்தைகளில் ஒரு கரடுமுரடான போக்கு தொடா்கிறது. இதன் காரணமாக சந்தை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு தொடா்ந்து அதிக நாள்கள் (7 நாள்கள்) தொடா் இழப்பைப் பதிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT