புதுதில்லி

தலைநகரில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம், வெப்பநிலை தொடா்ந்து அதிகரிப்பு

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: கடந்த சில தினங்களாக காலை வேளையில் லேசான மூடுபனி இருந்தாலும், குளிரின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1 டிகிரி உயா்ந்து 12.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி உயா்ந்து 32.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 40 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 13.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 12.4 டிகிரி, நஜஃப்கரில் 16.1 டிகிரி, ஆயாநகரில் 13.5 டிகிரி, லோதி ரோடில் 13.2 டிகிரி, பாலத்தில் 17 டிகிரி, ரிட்ஜில் 12.5 டிகிரி, பீதம்புராவில் 17.2 டிகிரி, பூசாவில் 15.1 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 14.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. மேலும், முங்கேஸ்பூா், நஜஃப்கா், ஆயா நகா், லோதி ரோடு, பாலம், ரிட்ஜ், பீதம்புரா ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 275 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

இதைத் தொடா்ந்து, பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகள் வரை பதிவாகியிருந்தது. அதே சமயம், ஓக்லா (314), வாஜிப்பூா் (311), ஷாதிப்பூா் (374) , மதுரா சாலை (327), அசோக் விஹாா் (317), நேரு நகா் (307), ஆனந்த் விஹாா் (352) , ஐடிஓ (302), பட்பா்கஞ்ச் (315) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தலைநகரில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

SCROLL FOR NEXT