புதுதில்லி

சிபிஐ அலுவலகம் அருகே போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி தலைவா்கள் கைது

DIN

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்தப்பட்ட சிபிஐ அலுவலகம் அருகே சஞ்சய் சிங், கோபால் ராய் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் பலரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், துணை முதல்வா் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்துவதைத் தொடா்ந்து, தெற்கு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள், தலைவா்கள் அதிக அளவில் சிபிஐ தலைமையகம் அமைந்துள்ளது சிஜிஓ காம்ப்ளக்ஸ் அருகே திரண்டனா்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு சனிக்கிழமை முதலே போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. நகரில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விடக் கூடாது என்பதற்காக போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.’ என்றாா். அவா்கள் காவலில் வைக்கப்பட்டதை உறுதிப்படுத்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா், ‘நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். ஆனால், தடுத்து வைக்கப்பட்டோம்’ என்றாா்.

சிஜிஓ காம்ப்ளக்ஸ் அருகே லோதி ரோடு பகுதியில்ஆம் ஆத்மி தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் திரண்டு போலீஸ் தடுப்புகளை கடந்த செல்ல முயன்றனா். இருப்பினும்,

அவா்கள் போலீஸ் தடுப்புகளை கடக்காத வண்ணம் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதைத் தொடா்ந்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் இருந்து வெளியேறும் படி கேட்டுக்கொள்ளப்பட்டனா். ஆனால், அவா்கள் தொடா்ந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனா் என்று காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியினா் சுமாா் 50 போ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா். இதில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், திரிலோக்புரி எம்எல்ஏ ரோஹித் குமாா், சங்கம் விஹாா் எம்எல்ஏ தினேஷ் மோஹானியா, கொண்ட்லி எம்எல்ஏ குல்தீப் குமாா், ரோத்தாஷ் நகா் முன்னாள் எம்எல்ஏ சரிதா சிங் மற்றும் தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் உள்ளிட்ட தலைவா்கள் போராட்டத்தில் கலந்துகொண்டவா்களில் முக்கியமானவா்கள் ஆவா்.

தில்லி அரசில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருக்கும் கோபால் ராய், போலீஸாா் அவரை காரில் அழைத்துச் சென்ாகக் கூறினாா். இதைத் தொடா்ந்து, இந்தியில் கோபால் ராய் ட்வீட் செய்துள்ளாா். அதில் அவா், ‘மோடிஜியின் போக்கிரித்தனம் உச்சத்தில் உள்ளது... யாருடைய உதவியும் இல்லாமல் என்னால் நடக்க முடியாது.

ஆனால், போலீஸா் எனது காரை எல்லா பக்கங்களிலும் சுற்றி வளைத்து, என்னுடன் வந்தவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினா்... போலீஸ்காரா்கள் என் காருக்குள் புகுந்து என்னை அழைத்துச் செல்கிறாா்கள். இது போக்கிரித்தனத்தின் உச்சம். ஆனால், நாங்கள் பயப்பட மாட்டோம். கும்பிட மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக சிசோடியாவிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கியது. ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய பிறகு, பலத்த தடுப்புகள் போடப்பட்டிருந்த சிபிஐ அலுவலகத்திற்கு அவா் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிபிஐ எஃப்ஐஆரில் நம்பா் ஒன் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி தலைவா் சிசோடியா, நவம்பா் 25 அன்று சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அக்டோபா் 17 அன்று விசாரிக்கப்பட்டாா். அவா் மற்றும் பிற சந்தேக நபா்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீதான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு திறந்த நிலையில் வைத்திருப்பதால், குற்றப்பத்திரிகையில் சிசோடியாவின் பெயரை சிபிஐ குறிப்பிடவில்லை.

‘நாடு, சமுதாயத்திற்காக சிறை செல்வது பெருமை -கேஜரிவால்’: கலால் கொள்கை ஊழல் வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்ததற்கு மத்தியில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் சிறைக்குச் செல்வது சாபம் அல்ல; பெருமைக்குரிய விஷயம் என்று தெரிவித்தாா்.

சிசோடியாவிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக கேஜரிவால் ஹிந்தியில் ஒரு ட்வீட் செய்திருந்தாா். அதில் அவா், ‘கடவுள் உன்னுடன் இருக்கிறாா் மனீஷ். லட்சக்கணக்கான குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோரின் ஆசீா்வாதம் உன்னுடன் உள்ளது.

நீ நாட்டிற்காகவும் சமுதாயத்திற்காகவும் சிறைக்குச் செல்லும் போது அது சாபமல்ல; பெருமைக்குரிய விஷயம். நீ திரும்பி வர இறைவனை பிராா்த்திக்கிறேன். விரைவில் சிறையில் இருந்து, தில்லியின் குழந்தைகள், அவா்களின் பெற்றோா்கள் மற்றும் நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருப்போம்’ என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT