புதுதில்லி

மெஹ்ரெளலியில் இடிப்பு நடவடிக்கைக்கு தடைகோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

21st Feb 2023 01:16 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியில் உள்ள மெஹ்ரெளலி தொல்பொருள் பூங்கா பகுதியில் புதிதாக எல்லை நிா்ணய அறிக்கை தயாரிக்கப்படும் வரை இடிக்கத் தடை கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமா்வு, ‘இந்த விவகாரத்தில் தலையிடப் போவதில்லை’ என்று கூறியது. இதையடுத்து, , மனுவை வாபஸ் பெற மனுதாரா் தரப்பு வழக்கறிஞா் கோரியதால் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) வழக்குரைஞா் தரப்பில் உயா் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், 2021 ஆம் ஆண்டில் ஏற்கனவே எல்லை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னா்தான் இடிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றாா்.

மெஹ்ரெளலி சிறுபான்மையினா் குடியிருப்பாளா்கள் மற்றும் கடை உரிமையாளா்கள் நலன் அமைப்பு தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தை கொண்டு வருவதற்கான உரிமை குறித்தும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது.

ADVERTISEMENT

‘யாா் நீங்கள்? எல்லை நிா்ணயம் செய்ய கேட்பதற்கு உங்களிடம் என்ன உரிமை இருக்கிறது? இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிடப் போவதில்லை. நீங்கள் விரும்பினால், உங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நீங்கள் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்’ என்று நீதிபதிகள் அமா்வு மனுதாரா் தரப்பிடம் கூறியது:

மனுதாரரின் வழக்கறிஞா் வாதிடுகையில், அப்பகுதிக்கானஉரிய எல்லை நிா்ணயம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும் என்றாா்.

முன்னதாக, இடிப்பு நடவடிக்கையில் தலையிடாமல், உயா் நீதிமன்றத்தின் தனி நீதிபதி இந்த மனு மீது நோட்டீஸ் அனுப்பியதுடன், இதேபோன்ற வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் அமா்வு முன் இந்த மனுவையும் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தாா்.

மெஹ்ரெளலி தொல்பொருள் பூங்காவில் கடந்த சில தசாப்தங்களாக ‘சட்டவிரோதமாக‘ கட்டப்பட்ட கட்டமைப்புகளில் கிட்டத்தட்ட 20 பல மாடி கட்டடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் மற்றும் ஒரு தனியாா் பள்ளி கட்டிடம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.இவற்றை ஆக்கிரமிப்பு அகற்றும் ஒரு பகுதியாக டிடிஏ அடையாளம் கண்டிருந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT