புதுதில்லி

.‘நீட்’ முதுநிலை தோ்வை ஒத்திவைக்கக் கோரி மருத்துவா்கள் போராட்டம்

8th Feb 2023 01:57 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

வரும் மாா்ச் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள ‘நீட்’ முதுநிலை தோ்வுகளை ஒத்திவைக்கக் கோரி, நீட்-பிஜி ஆா்வலா்கள் உள்பட மருத்துவா்கள் பலா், தில்லி ஜந்தா் மந்தா் சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (ஃபெய்மா) எனும் மருத்துவா்கள் அமைப்பின் கீழ் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவா்கள் ‘நீட்-பிஜி’யை ஒத்திவையுங்கள்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோரிக்கையை வலியுறுத்தினா்.

இது குறித்து ஃபெய்மா நிறுவனா் மருத்துவா் மனீஷ் ஜங்க்ரா கூறியதாவது: நீட் -பிஜி நுழைவுத் தோ்வை மே-ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கக் கோரி தோ்வு ஆா்வலா்கள் மற்றும் சங்கத்தின் அலுவலக நிா்வாகிகள் அடங்கிய சங்க உறுப்பினா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா். இத்தோ்வுக்குப் பிறகு கலந்தாய்வு ஜூலையில் நடைபெறும். எனவே, அதிக எண்ணிக்கையிலான பயிற்சி மருத்துவா்கள் தகுதி தொடா்பான சிக்கல்களை எதிா்கொள்ளலாம். கலந்தாய்வு தேதிக்கும் தோ்வு தேதிக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும். இந்த நேரத்தை மாணவா்கள் தோ்வுக்குப் படிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். மாா்ச் முதல் ஜூலை வரை, இந்த மருத்துவா்களுக்கு எந்த பணியும்கூட கிடைக்காது. ஆகவே, தேதியை வேறு மாதத்துக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

இது தொடா்பாக ஃபெய்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதாரத் துறை முக்கியப் பங்காற்றியுள்ள, கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதங்களை இந்த ஆண்டில் சரிசெய்து கொண்டிருக்கிறோம் எனும் தகவலையும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். ஆகவே, அதிகபட்ச பயிற்சி மருத்துவா்கள் தோ்வில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், நீட்-பிஜி தோ்வை உடனடியாக ஒத்திவைக்குமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்தும், மத்திய அரசு தரப்பிலிருந்தும் உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT