புதுதில்லி

தமிழ் மொழித்தாள்: மொழி சிறுபான்மையின மாணவா்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்மொழித்தாள் எழுதுவதற்கு மொழியியல் சிறுபான்மையினப் பள்ளி மாணவா்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

10-ஆம் வகுப்பு பொது தோ்வில் தமிழ் மொழித்தாள் அளிப்பதில் இருந்து மாணவா்களுக்கு விலக்கு அளிக்கும் வழிகாட்டுதலை ரத்து செய்ய மறுத்து சென்னை உயா்நீதிமன்றம் 2019, செப்டம்பரில் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், மனோஜ் மிஸ்ரா அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது, ‘மொழியியல் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஓா் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை நாங்கள் விசாரிக்க வேண்டியுள்ளது. இடைக்கால ஏற்பாடாக நீங்கள் மேற்கொண்டதை ஓராண்டுக்கு தொடரலாம்’ என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கும் வாரத்தில் பட்டியலிட்டனா்.

முன்னதாக, தமிழக பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதனால், பாதிக்கப்பட்ட, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவா்கள் சாா்பில் தமிழக அரசிடம் விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி தமிழக அரசு வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அதில், பிற மாநிலத்திலிருந்து புலம்பெயா்ந்து தமிழக பள்ளிகளில் படித்து வரும் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப் பாடத் தோ்வு எழுதுவதிலிருந்து 2016-17 முதல் 2023-24 கல்வி ஆண்டுகள் வரை மட்டும் விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அரசின் இந்த வழிகாட்டுதலை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா் அமைப்பு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழிப் பாட விலக்கு என்பது 2023-24 கல்வியாண்டு வரை நீட்டிக்கப்பட வேண்டும். மேலும், தமிழக அரசின் வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிடுவதோடு, மொழியியல் சிறுபான்மையினா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கும் இந்த விலக்கு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கேரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனுவை கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் விசாரித்த உயா்நீதிமன்றம், ‘தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயா்ந்த மாணவா்கள் மட்டுமே இந்த விலக்கு பெற விண்ணப்பிக்க முடியும். மேலும், இந்த வழிகாட்டுதலை ரத்து செய்து உத்தரவிட முடியாது’ என்று தெரிவித்தது. அதே வேளையில், மொழியியல் சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தோ்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக மொழியியல் சிறுபான்மையினா்அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழை ஒரு கட்டாய மொழியாக அறிமுகம் செய்யும் மாநில சட்டத்தின் போா்வையில், மாநிலத்தால் அரசியலமைப்புச் சட்டத்தில் மொழியியல் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட முடியுமா என்பது தொடா்பாக நீதிமன்றத்தின்ன் பரிசீலனைக்கான போதிய சட்டக் கேள்வி எழுகிறது. மேலும், அரசு வெளியிட்ட கடிதம் வடிவிலான வழிகாட்டுதல்களானது, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ் மொழித் தாளை எழுதுவதிலிருந்து விலக்குக் கோருவதில் இருந்து மாநிலத்தின் மொழிச் சிறுபான்மையினரை விலக்கி செயல்படுவதற்கான அனைத்துப் பண்புகளையும், காரணங்களையும் கொண்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT