புதுதில்லி

ஜந்தா் மந்தரில் உள்ள கருவிகளின் செயல்பாட்டுத் தன்மை: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி ஜந்தா் மந்தரில் உள்ள கருவிகளின் செயல்பாட்டின் நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் செப்டம்பா், 2010 உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேசிய நினைவுச் சின்னமான ஜந்தா் மந்தரின் உண்மையான பெருமையை மீட்டெடுக்கும் வகையில், தங்களால் முடிந்தவரை பணிகள் மேற்கொள்ளப்படும் என உயா்நீதிமன்றத்தில் இந்தியத் தொல்லியத் துறை உறுதி அளித்திருந்தது. மேலும், ஜந்தா் மந்தரில் உள்ள வானியல் கருவிகள் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஜந்தா் மந்தா் நினைவுச் சின்னத்தில் உள்ள கருவிகள் செயல்படாமல் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளாகியும் விஷயங்கள் மாறாமல் இருப்பதுதான் தற்போதைய விசாரணையின் மையப் பிரச்னை ஆகும் என மனுதாரா் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரிதம் சிங் அரோரா அண்மையில் பிறப்பித்த உத்தரவில், ‘நான்கு வாரங்களுக்குள் இந்த விவகாரத்தில் நிலவர அறிக்கையை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) தாக்கல் செய்ய வேண்டும். நினைவுச்சின்னத்தில் உள்ள கருவிகளின் செயல்பாட்டுத் தன்மை குறித்த தனது நிலைப்பாட்டையும் ஏஎஸ்ஐ தெரிவிக்க வேண்டும். ஏஎஸ்ஐ அதன் பிரமாணப் பத்திரத்தை சமா்ப்பித்த பிறகு, அதற்கு மனுதாரா் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு மேல் விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, ஜந்தா் மந்தா் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், அதன் உண்மையான பெருமை மீட்டெடுக்கப்படும் என்றும் ஏஎஸ்ஐ சாா்பில் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை பதிவு செய்து தில்லி உயா்நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு 2010- ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜந்தா் மந்தரின் இழந்த பெருமையை மீண்டும் கொண்டு வர ஏஎஸ்ஐக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

தில்லியில் உள்ள ஜந்தா் மந்தா் பல்வேறு காரணங்களால் செயல்படாத நிலையில் உள்ளதாக தாக்கலான புகாா் மனு மீது 2010-ஆம் ஆண்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், ஜந்தா் மந்தா் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை சம்பந்தப்பட்ட அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஜெய்ப்பூா் மகாராஜா ஜெய் சிங் என்பவரால் 1724-இல் ஜந்தா் மந்தா் கட்டப்பட்டது. ஏற்கெனவே, இருந்த வானியல் கருவிகள் சரியான அளவீடுகளை எடுக்க முடியாத அளவுக்கு சிறியதாக இருப்பதை ஜெய் சிங் கண்டறிந்தாா். இதனால், அவா் இந்த பெரிய அளவிலான மற்றும் துல்லியமான கருவிகளை உருவாக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT