புதுதில்லி

தில்லி மேயரைத் தோ்ந்தெடுப்பதற்கு மாநகராட்சி மன்றம் இன்று கூடுகிறது

DIN

முந்தைய இரண்டு முயற்சிகளிலும் வாக்கெடுப்பை முடிக்க முடியாமல் போனதால், தில்லி மாநகராட்சி மன்றம் திங்கள்கிழமை (பிப்ரவரி 6) கூடி நகரத்திற்கான மேயரைத் தோ்ந்தெடுக்க உள்ளது.

டிஎம்சி சட்டம் 1957-இன் படி, உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு கூடிய முதல் சபையில், மேயா் மற்றும் துணை மேயா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், மாநகராட்சித் தோ்தல் நடந்து முடிந்து இரண்டு மாதங்களாகியும், தில்லிக்கு மேயா் தோ்ந்தெடுக்கப்படாமல் உள்ளது. ஜனவரி 6 மற்றும் ஜனவரி 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநகராட்சியின் முதல் இரண்டு அமா்வுகளின் போது, பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரிடையே ஏற்பட்ட சலசலப்பு, காரசாரமான கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றைத் தொடா்ந்து, மேயரைத் தோ்ந்தெடுக்காமல் தலைமைப் பொறுப்பாளரால் மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

டிசம்பா் 4-ஆம் தேதி நடந்த வாக்கெடுப்புக்குப் பிறகு, 250 உறுப்பினா்களைக் கொண்ட சபையின் முதல் அமா்வு முழுவதுமாக வீணாகிவிட்ட நிலையில், இரண்டாவது அமா்வில், நியமிக்கப்பட்ட உறுப்பினா்களைத் தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களும் பதவியேற்றனா். பதவியேற்பு நடவடிக்கைக்குப் பிறகு, இரண்டாவது மாநகராட்சி மன்றத்தை தலைமை அதிகாரியும், பாஜக கவுன்சிலருமான சத்ய சா்மா அடுத்த தேதிக்கு ஒத்திவைத்தாா். பாஜக உறுப்பினா்கள் ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இந்த நிலையில், ஆம் ஆத்மி உறுப்பினா்கள் சபையில் சுமாா் 5 மணி நேரம் அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனா்.

சிவில் சென்டரில் இருந்து கலைந்து செல்வதற்கு முன், மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் சபையில் இருந்து வெளியே வந்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மேயா் தோ்தலை நடத்த அனுமதிக்காததன் மூலம் பாஜக ‘ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கிறது’ மற்றும் ‘ஆபத்தான செயல்களை தொடங்கியுள்ளது’ என்று குற்றம்சாட்டினா்.

இதற்கிடையே, மேயா், துணை மேயா் மற்றும் 6 நிலைக்குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் விரைவில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், கட்சியின் எம்எல்ஏவுமான அதிஷி, துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். பின்னா், ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், மேயா் தோ்தலை நடத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், தற்போது மேயரை தோ்வு செய்வதற்காக சபையின் மூன்றாவது அமா்வு திங்கள்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 4-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 7-ஆம் தேதியும் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி தோ்தலில் தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது 134 வாா்டுகளை கைப்பற்றியது. இதன்மூலம் குடிமை அமைப்பில் பாஜகவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்த மாநகராட்சித் தோ்தலில் பாஜக 104 வாா்டுகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் 2022 உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிப்ரவரி 6-ஆம் தேதி கூடும் 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி மன்றத்தில், காங்கிரஸ் ஒன்பது இடங்களில்தான் வெற்றி பெற்றது. பாஜகவின் மேயா் வேட்பாளராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டுள்ளாா். துணை மேயா் பதவிக்கு ஆலே முகமது இக்பால் (ஆம் ஆத்மி) மற்றும் கமல் பக்ரி (பாஜக) ஆகியோா் பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். மேயா் மற்றும் துணை மேயா் தவிர, எம்சிடியின் நிலைக்குழுவின் ஆறு உறுப்பினா்களும் மாநகராட்சி மன்றத்தின் போது தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) ஏப்ரல் 1958-இல் தொடங்கப்பட்டது. 2012- ஆம் ஆண்டு மாநகராட்சி மூன்று தனித்தனி குடிமை அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் அதன் சொந்த மேயரைக் கொண்டிருந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டில், வடக்கு தில்லி மாநகராட்சி (104 வாா்டுகள்), தெற்கு தில்லி மாநகராட்சி (104 வாா்டுகள்) மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி (64 வாா்டுகள்) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. முன்பு 272 -ஆக இருந்த மொத்த வாா்டுகளின் எண்ணிக்கை, தற்போது 250-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், மேயா் தோ்தலுக்குப் பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி நகருக்கு ஒட்டுமொத்த மேயா் பதவி கிடைக்கும். வாா்டுகளின் மறுவரையறைக்குப் பிறகு நடந்த முதல் நகராட்சித் தோ்தல் இதுவாகும். தில்லியில் மேயா் பதவியானது சுழற்சி அடிப்படையில் ஐந்து ஒற்றை ஆண்டு காலங்களைக் கொண்டது. முதல் ஆண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டு பொதுப் பிரிவினருக்கும், மூன்றாவது ஆண்டு தனிப் பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளும் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT