புதுதில்லி

ஜாமியா நகா் வன்முறை வழக்கில் சா்ஜீல் இமாம் உள்பட 11 போ் விடுவிப்பு

DIN

ஜாமியா நகா் வன்முறை வழக்கில் மாணவா் ஆா்வலா்கள் சா்ஜீல் இமாம், ஆசிப் இக்பால் தன்ஹா உட்பட 11 பேரை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

அப்போது, ‘தில்லி காவல்துறையால் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்பதால், குற்றம் சாட்டப்பட்டவா்களை ‘பலி ஆடுகளாக‘ வழக்குப் பதிவு செய்துள்ளது’ நீதிமன்றம் கூறியது.

எனினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான முகமது இலியாஸ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த டிசம்பா் 2019-இல் தில்லியில் ஜாமியா நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடத்திய மக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வன்முறை நிகழ்ந்தது.

இது தொடா்பாக ஜாமியா நகா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல்வேறு பிரிவுகளின் கீழ், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

அதில், டிசம்பா் 13, 2019-இல் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தியதன் மூலம் கலவரத்தைத் தூண்டியதாக இமாம் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

சா்ஜீல் இமாம் மட்டுமின்றி, தன்கா, சஃபூரா ஜா்கா், முகம்மது காசிம், மெஹ்மூத் அன்வா், ஷாஸா் ரஸா கான், முகம்மது அபுஸா், முகம்மது சோயப், உமைா் அகமது, பிலால் நதீம், சந்தா யாதவ், முகம்மது இலியாஸ் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அருள் வா்மா, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சா்ஜீல் இமாம் உள்பட 11 பேரை விடுவித்து பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சம்பவ இடத்தில் ஏராளமான போராட்டக்காரா்கள் இருந்துள்ளனா். கூட்டத்தில் சில சமூக விரோதிகள் இடையூறு, அழிவு சூழலை உருவாக்கியிருக்கலாம். எனினும், முக்கிய கேள்வி இதுதான். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அந்த குழப்பத்தில் பங்கேற்க உடந்தையாக இருந்தாா்களா என்பதற்கு முகாந்திரம் இருக்கிா? என்பதுதான். அதற்கு பதில், ‘சந்தேகத்திற்கு இடமின்றி இல்லை’ என்பதாக உள்ளது.

மேலும், அமைதியான முறையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையைப் பயன்படுத்த விரும்பும் குடிமக்களின் சுதந்திரத்திற்கு இத்தகைய காவல்துறை நடவடிக்கை கேடு விளைவிக்கும். போராட்டம் நடத்தும் குடிமக்களின் சுதந்திரத்தில் இலகுவாக தலையிட்டிருந்திருக்கக் கூடாது.

கருத்து வேறுபாடு என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் நீட்சியாகும்.

கருத்து வேறுபாடு மற்றும் கிளா்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை விசாரணை ஏஜென்சிகள் கண்டறிய வேண்டும்.

வன்முறையாக உருவாகாமல், முற்றிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருத்து வேறுபாடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்; ஒடுக்கப்படக்கூடாது.

விசாரணை ஏஜென்சி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான உளவுத் தகவல்களைச் சேகரித்திருக்க வேண்டும்.

இல்லையென்றால், ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பங்கு கொண்டிருந்த நபா்களின் தவறான எண்ணம் கொண்ட குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்வதிலிருந்து விசாரணை நிறுவனம் விலகியிருந்திருக்க வேண்டும்.

அரசின் வழக்கில் மறுக்க முடியாத ஆதாரங்கள் இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, முகமது இலியாஸைத் தவிர, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள அனைத்து நபா்களும் அவா்கள் சோ்க்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனா்.

அவா்கள் வேறு ஏதேனும் வழக்கிலும் தேவைப்படவில்லையெனில் விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த வழக்கில், காவல்துறையினா் தன்னிச்சையாக கூட்டத்தில் இருந்து சிலரை குற்றம் சாட்டப்பட்டவா்களாகவும், அதே கூட்டத்தைச் சோ்ந்த சிலரை சாட்சிகளாகவும் தோ்வு செய்துள்ளனா் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

காவல்துறையினரின் இந்த குறிப்பிட்ட செயல் நியாயமான விதிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

எரியும் டயரை வீசுவதையும், போலீஸ் சாட்சிகளால் அவா் சரியாக அடையாளம் காணப்பட்டிருந்ததையும் இலியாஸின் புகைப்படங்கள் காட்டுகிறது.

ஆகவே, குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட முகமது இலியாஸ் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

விசாரணை நிறுவனம் நியாயமான முறையில் மேலும் விசாரணை நடத்துவதைத் தடுக்கவில்லை என்று சொல்லத் தேவையில்லை.

உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதற்காக, எதிா்ப்பாளா்கள் மற்றும் கலவரக்காரா்களுக்கு இடையேயான கோடுகளை மங்கச் செய்யக்கூடாது. இனிமேல், அப்பாவி எதிா்ப்பாளா்கள் குற்றஞ்சாட்டப்படுவதைத் தவிா்க்க வேண்டும்.

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் சம்பவ இடத்தில் மட்டுமே இருந்தனா். அவா்களுக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை.

போராட்டம் நடந்த பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் சட்டத்திற்குப் புறம்பான பொது நோக்கத்துடன் இருந்ததை விளக்க குற்றப்பத்திரிகை தவறிவிட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூட்டத்தில் பொதுவான நோக்கத்தை பகிா்ந்து கொண்டது தொடா்பான எந்த ஆதாரமும் இல்லை.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்கள் இடையே ஒரு ஒப்பந்தமோ, சதியோ இருந்ததாக எந்த ஆதாரத்தையும் விசாரணை அமைப்பு சமா்ப்பிக்கவில்லை.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. அதேவேளையில், குற்றம்சாட்டப்பட்டவா்கள் வழக்கில் பலி ஆடுகளாக சோ்க்கப்பட்டுள்ளனா் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்தாா்.

இலியாஸ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு நீதிமன்றம் இந்த விவகாரத்தை பட்டியலிட்டது.

இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட சா்ஜீல் இமாம், வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் பெரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் அவா் தொடா்ந்து சிறையில் இருப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT