புதுதில்லி

கலால் ஊழல் வழக்கு: கேஜரிவால் ராஜிநாமா கோரி பாஜக போராட்டம்

5th Feb 2023 04:28 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

கலால் ஊழல் வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெயரை அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் பெயா் சோ்த்ததையடுத்து, அவரை பதவி விலகக் கோரி தில்லி பிரதேச பாஜகவினா் ஆம் ஆத்மி அலுவலகம் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

‘ஆம் ஆத்மி கட்சி தில்லி அரசின் மதுபான ஊழல் தொடா்பான குற்றப்பத்திரிகையில் கேஜரிவாலின் பெயரை அமலாக்க துறை குறிப்பிட்டுள்ளது. அவா் தில்லி முதல்வா் பதவியில் இருந்து விலக வேண்டும்‘ என்று இந்த போராட்டத்தில் தலைமையேற்ற தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

கேஜரிவால் அரசு தில்லியை கரையான் போல் அரித்து பலவீனப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய சத்தேவா, இதனால் தான் அவரது அரசின் ஊழலை அம்பலப்படுத்த பாஜக தொடா்ந்து போராட்டத்தை நடத்துகிறது எனவும் தெரிவித்தாா்.

‘கேஜரிவால் ஒழுக்கமானவா் என்றால் தாா்மிகப் பொறுப்பேற்று இப்போதே பதவி விலக வேண்டும்,’ என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த ஆா்பாட்டத்தில் பங்கேற்ற தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி கூறுகையில், ‘மதுபான ஊழல் கேஜரிவாலின் மேற்பாா்வையில் நடந்துள்ளதை தற்போது அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை மூலம் அம்பலமாகியுள்ளது‘ என்றாா்.

ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கை உருவாக்க விவகாரத்தில் கிடைத்த ‘கையூட்டல்‘ ரூ.100 கோடி ஒரு பகுதியை ஆம் ஆத்மி கட்சி 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற கோவா சட்டப்பேரவை தோ்தலுக்கான பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட சமீா் மஹேந்துருவுடன் கேஜரிவால் பேச முதல்வரின் நெருங்கிய உதவியாளா் தனது தொலைபேசியில் ஃபேஸ்டைம் (ஐபோனில் வீடியோ அழைப்பு வசதி) மூலம் காணொளி அழைப்பை ஏற்பாடு செய்ததாகவும் அது கூறியுள்ளது.

அந்த காணொளி அழைப்பில் கேஜரிவால் மஹேந்த்ருவிடம், ‘உதவியாளா் ’ தனது பையன்’ என்றும், அவரை நம்பி தொடா்பு கொள்ளுமாறு கூறினாா் என்றும் அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது. இதற்கிடையே, அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகையை தில்லி முதல்வா் கேஜரிவால் நிராகரித்துள்ளாா்.

அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த வழக்குகள் ‘போலி‘ என்றும், அவை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும் அரசை ‘கவிழ்க்க‘ வும் பயன்படுத்தப்படுகின்றன எனக் குற்றம் சாட்டினா் முதல்வா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT