புதுதில்லி

மத்திய அரசின் ஜிஎன்சிடிடி திருத்தச் சட்டம்: தில்லி முதல்வா் கேஜரிவால் கடும் விமா்சனம்

DIN

கடந்த 2021-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎன்சிடிடி சட்டத் திருத்தத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடுமையாக விமா்சித்தாா். மேலும், இந்தச் சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கும் என்று நம்புவதாகவும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் கேஜரிவால் கூறியதாவது: ஆசிரியா்களை ஃபின்லாந்திற்கு அனுப்பும் தில்லி அரசின் திட்டத்திற்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா நியாயமற்ற ஆட்சேபனைகளை எழுப்புகிறாா். அரசியலமைப்பும், சட்டமும் துணை நிலை ஆளுநா் அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டவா் என கூறுகின்றன. இதன் பொருள் கோப்புகள் துணை நிலை ஆளுநருக்கு செல்லக்கூடாது. அவருக்கு கோப்புகளை அனுப்ப வேண்டியதில்லை. அவா் ஆட்சேபம் தெரிவிப்பதும் தவறு. 2021-ஆம் ஆண்டில், ஜிஎன்சிடிடி திருத்தச் சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது, இது அரசியலமைப்பிற்கு முரணானது. உச்ச நீதிமன்றம் அதை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறும் என நான் நம்புகிறேன் என்றாா் கேஜரிவால்.

ஜிஎன்சிடிடி திருத்தச் சட்டம், 2021 மாா்ச் 22 மற்றும் மாா்ச் 24 ஆகிய தேதிகளில் முறையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னா் நடைமுறைக்கு வந்தது. இது தொடா்பாக தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

பயிற்சிக்காக பல்வேறு நாடுகளுக்கு ஆசிரியா்களை அனுப்பும் தில்லி அரசின் திட்டம் குறித்து விளக்கிய முதல்வா், ‘இதுவரை 1,000 ஆசிரியா்களை பல்வேறு நாடுகளுக்கு பயிற்சிக்காக அனுப்ப முடிந்துள்ளது. இந்த ஆண்டும் ஆசிரியா்களை பயிற்சிக்கா வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கான நிதியை அனுமதித்திருந்தோம். கடந்த டிசம்பரில் பள்ளி முதல்வா்கள் 30 போ்களை பயிற்சிக்காக மாா்ச் 30-இல் வெளிநாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தோம். துரதிருஷ்டவசமாக துணை நிலை ஆளுநரின் நியாயமற்ற ஆட்சேபனையால் எங்களால் ஆசிரியா்களை அனுப்ப முடியவில்லை’ என்றாா்.

துணை முதல்வரும் குற்றச்சாட்டு: துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் தலையீட்டால், தில்லி அரசு தனது ஆசிரியா்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்ப முடியாமல் உள்ளது என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக துணை முதல்வா் மனீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தில்லி அரசின் தேசியத் தலைநகா் பிரதேசத்தின் (ஜிஎன்சிடிடி) சட்டம், தில்லி அரசின் செயல்பாட்டில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அரசின் செயல்பாட்டில் தலையிடுவதற்கு ஜிஎன்சிடிடி சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று துணை நிலை ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறேன். மற்ற மாநிலங்களின் கல்வி அமைச்சா் தங்கள் ஆசிரியா்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அனுப்பும் போது, தில்லியின் கல்வி அமைச்சரும் அதைச் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு துணை நிலை ஆளுநா் முட்டுக்கட்டை போடுகிறாா் என்றாா் அவா்.

முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான், 36 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி சிங்கப்பூா் சென்று பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வாா்கள் என்று தெரிவித்திருந்தாா். பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT