புதுதில்லி

தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு டிசம்பா் வரை ஊதியம், ஓய்வூதியம் வழங்கல்: உயா்நீதிமன்றத்தில் எம்சிடி தகவல்

 நமது நிருபர்

தில்லி மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு டிசம்பா் வரை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்கான தொகை விரைவில் செலுத்தப்படும் என்றும் உயா் நீதிமன்றத்தில் எம்சிடி ஆணையா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாததைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையா் நீதிமன்றத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தாா். இந்த நிலையில், இந்த விவகாரம் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி மாநகராட்சி ஆணையா் மூலம் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு மற்றும் ஆசிரியா்கள் உள்பட அனைத்து ஊழியா்களுக்கும் டிசம்பா் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிா்காலத்தில் கவனமாக இருப்போம்’ என்றும் அவா் தெரிவித்தாா். அவரது சமா்ப்பித்தலைக் குறிப்பிட்டு, நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த விஷயத்தை விசாரணைக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

முன்னதாக, ஜனவரி 30-ஆம் தேதி இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த போது, எம்சிடி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு சம்பளம் வழங்காதது ‘துரதிருஷ்டவசமானது‘ என உயா்நீதிமன்றம் கூறியது. மேலும், குடிமை அமைப்பின் ஆணையா் மற்றும் நகர அரசின் மூத்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

அவ்வப்போது நீதிமன்றத்திற்கு உத்தரவாதம் அளித்த போதிலும், எம்சிடியின் மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

மனுதாரரான ஆசிரியா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அசோக் அகா்வால் மற்றும் உத்கா்ஷ் குமாா் ஆகியோா், ‘இரண்டு முதல் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், மாநகராட்சி இந்த விவகாரத்தில் செயல்படாமல் இருப்பது தங்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை மீறுவதாக உள்ளது’ என்று உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

தில்லி அரசு மற்றும் எம்சிடி தரப்பு வழக்குரைஞா்கள் கூட்டாக அனைத்து தொகைகளும் விரைவாக விடுவிக்கப்படும் என்று கூறியிருந்த போதிலும் எதுவும் செய்யப்படவில்லை என்று டிசம்பா் 12-இல் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. எம்சிடி ஊழியா்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு முறையே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாதது தொடா்பான மனுக்களை நீதிமன்றம் விசாரித்த போது இவ்வாறு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT