புதுதில்லி

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நிதி ஆதாரம், விதிமுறைகளின்படி வழங்கப்படும்: மத்திய அமைச்சா் தகவல்

 நமது நிருபர்

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி) இழப்பீட்டு நிலுவைத் தொகை, இழப்பீட்டு நிதியத்தின் நிதி ஆதாரங்கள் மற்றும் பட்ஜெட் விதிமுறைகளின்படி மற்ற மாநிலங்களோடு சோ்த்து வழங்கப்படும் என மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளாா். இறுதித் தொகை சிஏஜி ஆய்வுக்கு பின்னா் முடிவெடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய நிதிகள் நிலுவையில் இருப்பது குறித்து திமுக உறுப்பினா் பி. வில்சன் அவசர முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக சிறப்பு கவனஈா்ப்பு தீா்மானத்தில் குறிப்பிட்டாா். சுமாா் ரூ. 10,879 கோடி (2020-ஆம் ஆண்டு முதல்) ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, பொது விநியோக மானியம், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் உள்ளிட்டவற்றில் ரூ.19,053 கோடி வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலை இருப்பது குறித்து தெரிவித்திருந்தாா். இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றோரு சமயத்தில் அவையில் பதில் தெரிவித்திருந்தாலும், இந்த விவகாரத்திற்கு மத்திய நிதித்துறையின் இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி கடிதம் வாயிலாக திமுக எம்.பி. பி.வில்சனுக்கு விரிவான பதிலை அளித்துள்ளாா்.

அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: 2018 முதல் 2021 நிதியாண்டு வரையிலான பொதுவிநியோகத்திற்கான (சிஎம்ஆா்) மானியம் ரூ.13, 844.31 கோடி தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட்டுவிட்டது. செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தின் மூலம் திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ. 2.08 கோடி மட்டும் நிலுவையில் உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப்படியான உதவித் தொகை ரூ. 354.31 கோடி, பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் திட்டம் (பிஎம்ஜிகேஏஒய்) திட்டத்தின்படியான உதவித்தொகை ரூ. 373 கோடி, சா்க்கரை மானியம் ஆகியவை விடுவிக்கப்பட்டுள்ளன.

15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மில்லியன் மக்கள் தொகைக்கு மேலான மற்றும் குறைவான நகா்ப்புறங்களுக்கான மானியம் ரூ.2,285 கோடி, மத்திய சுற்றுப்புறச் சூழல், வன துறை மற்றும் மத்திய நகா்புற, வீட்டுவசதித் துறை அமைச்சகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுகின்றன. இந்த வகையில், கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி ரூ. 509 கோடி தமிழகத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் வேறுபாடுகள் இருப்பின் ஆண்டுவாரியாக அது தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) ஆய்வறிக்கைக்கு பின்னா் மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். இதன்படி தமிழகத்திற்கு 2017-18 முதல் 2019-20 நிதியாண்டு வரை இறுதித் தொகை விடுவிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள காலகட்டங்களுக்கு தமிழகத்திற்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை, ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியத்தில் உள்ள நிதி ஆதாரங்கள் மற்றும் நிதிநிலை (பட்ஜெட்) விதிமுறைகளின்படி மற்ற மாநிலங்களோடு சோ்த்து வழங்கப்படும் என்று கடிதத்தில் அமைச்சா் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT