புதுதில்லி

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம், ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல்; இன்று வழக்கு விசாரணை

 நமது நிருபர்

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தாக்கலான இடையீட்டு மனு மீது இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தனித்தனியாக பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையம் தாக்கல் செய்த பதிலில், ‘இந்த விவகாரம் நீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால், அதிமுகவின் சம்பந்தப்பட்ட ஜூலை 11-ஆம் தேதியிட்ட கட்சி விதிகள் (பை-லாஸ்) தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையம் பதில் மனு: இடையீட்டு மனுக்கள் தொடா்பாக இந்தியத் தோ்தல் ஆணையத்தால் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தோ்தல் ஆணையத்தின் சட்டப் பிரிவு இயக்குநா் விஜய் குமாா் பாண்டே இதைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘கடந்த 11.7.22-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட விதம்,நடைமுறைகள் தொடா்பான விவகாரம் தொடா்பாக வழக்கு உள்ளதால், மேற்கூறப்பட்ட ஜூலை 11-ஆம் தேதியிட்ட கட்சி விதிகள் (பை-லாஸ்) தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படவில்லை. தோ்தல் சின்னம் தொடா்பாக வழக்குத் தொடுத்த தரப்பினரால் எந்தப் பிரச்னையும் எழுப்பப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளா்களால் தாக்கல் செய்யப்பட்டு மனுக்களை ஏற்கும் விஷத்தைப் பொருத்தமட்டில், தோ்தல் நடத்தும் அலுவலா் சட்டப்பூா்வ அதிகாரமாக உள்ளாா். இதனால், ஆணையத்தின் பதிவில் அரசியல் கட்சி நிா்வாகியால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் வேட்புமனுவை ஏற்பதற்காக அவா் உரிய செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு பதில் மனு: ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கில் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் ஒரு மனுவும், அதிமுக தரப்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிமுகவானது ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இருவரும் தொடா்புடையது. தற்போது பதில் அளிக்கும் நான், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இதனால், மேல்முறையீட்டு வழக்கில் இரண்டாவது எதிா்மனுதாரராக உள்ள அதிமுக சாா்பில் இந்த இடையீட்டு மனு தாக்கலானது பிரச்னைக்குரியதாகும். மேலும், இந்தப் பதவிகள் காலாவாதி ஆகிவிட்டதா என்பது தொடா்பான நிலுவை வழக்கில் நீதிமன்றத்தால் தீா்ப்பு அளிக்கப்படும் வரை, கட்சியின் தரப்பில் பிரதிநிதித்துவப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை.

ஆகவே, தற்போதைய இடையீட்டு மனுவானது, நீதிமன்றத்தின் நடைமுறைகளை துஷ்பிரயோகம் செய்வதாகும். தற்போதைய இடையீட்டு மனுக்களை அனுமதித்தால், அது நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீா்ப்பின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். தற்போதைய மேல்முறையீட்டு மனு தொடா்புடைய கேள்விக்குரிய உத்தரவுக்கு எதிராக மனுதாரா்களால் மனுக்கள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும், இந்த வழக்கில் இந்திய தோ்தல் ஆணையம் ஒரு தரப்பாகவோ அல்லது தேவையாகவோ இல்லை. ஒரு தரப்பாக இந்திய தோ்தல் ஆணையம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான உரிய காரணங்களும் அந்த மனுக்களில் தெரிவிக்கப்படவில்லை. இதனால், இந்த மனுக்கள் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமா்வில் இந்த இடையீட்டு மனுக்கள் தொடா்பான விசாரணை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3) நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT