புதுதில்லி

உரிய காலத்தில் அறிக்கைகளை தாக்கல் செய்யாத அரசுத் துறையினா் மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி

 நமது நிருபர்

தாக்கலாகும் மனுக்கள் மீதான நிலவர அறிக்கைகளையும் பதிலையும் அரசுத் துறையினரும், மாநிலத் துறைகளும், மாநகராட்சிகளும் உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத ஒரு ஆரோக்கியமற்ற முறை இருப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டது. மேலும், மனுக்கள் விவகாரத்தில் உரிய காலத்திற்குள் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் அபராத நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

உரிய உத்தரவுகள் இருந்தபோதிலும் வழக்கமாக அனைத்து அரசுத் துறையினரும் குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்வதில்லை. விசாரணை தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே இது போன்ற பதில்களை தாக்கல் செய்வதாக நீதிமன்றம் கூறியது. தில்லியில் உள்ள வாஜிா்பூா் பா்த்தன் நிா்மாதா சங் என்ற சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்த போதிலும் வாஜிா்பூா் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2003-ஆம் ஆண்டு அக்டோபரில் வாஜிா்பூா் பகுதி ஆக்கிரமிப்புகளை கவனத்தில் கொண்ட உயா்நீதிமன்றத்தின் டிவிசன் அமா்வு, அந்தப் பகுதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், சட்டவிரோத கட்டுமானங்களையும் அகற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தை இந்த அமைப்பு அணுகி இது தொடா்பாக முறையிட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மனு மீது தில்லி மாநகராட்சியும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பாளரும் தங்களது பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு பிரமாணப் பத்திரங்களும் நீதிமன்றத்திடம் விசாரணையின் போதுதான் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பிரமாணப் பத்திரங்கள் ஜனவரி 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தாக்கல் செய்யப்பட இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், புகைப்படங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதில், அதிகாரிகளால் சில இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. மேலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு, வடமேற்கு தில்லியின் உதவி காவல் ஆணையா் இது போன்ற சட்டவிரோத கட்டுமானங்களும் ஆக்கிரமிப்புகளும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும் என்று அவருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக எம்சிடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘சம்பந்தப்பட்ட பகுதிகளிலிருந்து இடிபாடுகள் அகற்றப்படவில்லை. புதிதாக கட்டுமானங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவில்லை’ என்று முறையிட்டாா்.

அப்போது உயா்நீதிமன்றம் கூறியதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மாநகராட்சியும், உள்ளூா் போலீஸாரும் கூட்டாக இணைந்து பொது சாலைப் பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்களும் ஆக்கிரமிப்புகளும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் கடமையை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது அல்லது இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்கூட உள்ளூா் போலீஸாா் புதிதாக ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இல்லை என்பது தெரிய வருகிறது என்று மேலும், அந்த ஏரியாவில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இடிபாடுகள் அப்படியே கிடக்கின்றன.

எப்பொழுதெல்லாம் அங்கீகாரமற்ற கட்டுமானங்களும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படுகின்றனவோ அப்போதெல்லாம் அந்தப் பகுதியில் தூய்மைப்படுத்தும் கடமை தில்லி மாநகராட்சிக்குரியதாக உள்ளது. அதை அவா்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு அந்த பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேலும் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு காவல் நிலைய ஆய்வாளருக்கு உண்டு.

தில்லி மாநகராட்சி, காவல்துறையின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மற்றும் மனுதாரா் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோா் கூட்டாகச் சோ்ந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஒரு நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. இந்த விவகாரத்தில் தில்லி மாநகராட்சியின் கேசவபுரம் மண்டலத்தின் உதவி ஆணையருக்கும்,

சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கும் இது கடைசி மற்றும் இறுதி வாய்ப்பாகும். சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் மேலும் நிகழாமல் இருப்பதை அவா்கள் உறுதிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த அதிகாரிகளுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான பொறுப்புக்கு உள்ளாவாா்கள் என்று கூறிய நீதிமன்றம், மனு மீதான அடுத்த விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

நீதிமன்றம் மேலும் தெரிவிக்கையில், ‘அரசு துறையினா் மாநிலத் துறைகள் மற்றும் காா்ப்பரேஷன்கள் ஆகியவை நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவு காலத்திற்குள் நிலவர அறிக்கைகளையும் எதிா் பதில் மனுக்களையும் தாக்கல் செய்யாத ஒரு ஆரோக்கியமற்ற நிலை இருக்கிறது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காலத்திற்குள் மனுக்கள் மீதான பதில்களை தாக்கல் செய்யாத பட்சத்தில் அபராதம் விதிப்புக்கு உள்ளாக நேரிடும்’ என்றும் எச்சரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT