புதுதில்லி

கரோனா காலத்தில் பள்ளி மாணவா்களுக்கு உணவுப் பாதுகாப்பு படி வழங்கப்பட்டது: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

2nd Feb 2023 02:03 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா தொற்றுநோய் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது, குழந்தைகளுக்கான உணவுப் பாதுகாப்பு படியாக நிதி வழங்கப்பட்டதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது. தற்போது, கரோன கட்டுப்பாடுகள் நடைமுறையில் இல்லாததால், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

தேசியத் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது, கரோனா பொதுமுடக்கக் காலத்தில் தகுதியான குழந்தைகளுக்கு சமைத்த மதிய உணவு அல்லது உணவு பாதுகாப்பு படி வழங்க தில்லி அரசுக்கு வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும் என கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2020 முதல் நிலுவையில் உள்ள இந்த மனு தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசு மேற்கூறியவற்றின் அடிப்படையில், தற்போதைய பொதுநல வழக்கில் மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை. மேலும், எந்தவொரு பயனாளியும் அரசால் பெறப்பட்ட நிதியின் அளவு தொடா்பாக பிரச்னை இருந்தால், அவா் சட்டத்தின்படி கிடைக்கக்கூடிய உதவியைப் பெற நிச்சயமாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இந்த அவதானிப்புடன் இந்த பொது நல மனு முடித்துவைக்கப்படுகிறது’ என தெரிவித்தது.

முன்னதாக, கரோனா நோய்த் தொற்று காலத்தின் போது மதிய உணவு அல்லது உணவு பாதுகாப்பு படி வழங்குவதன் நோக்கம் ஏழைக் குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிப்பதாகும் என்று மனுதாரரான தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மகிளா ஏக்தா மஞ்ச் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் தில்லி அரசின் கல்வி இயக்குநா், நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். அதில், ‘2020 மாா்ச் முதல் அமலுக்கு வரும் வகையில் மதிய உணவுக்குப் பதிலாக நேரடிப் பலன்கள் மூலம் உணவுப் பாதுகாப்பு படி செலுத்துவதற்காக நிதி வழங்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டிற்கான தற்காலிக கட்டணமாக இதுவரை ரூ.27 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.தில்லி அரசாங்கத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி ரூ.106 கோடி ஆகும். 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஜூலை 2019 சுற்றறிக்கையின்படி, சமையல் செலவில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மீதமுள்ள செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதாகும். தில்லியில், சமையல் செலவில் 40 சதவீதத்தையும், சிசிஎச் எனும் மதிய உணவு தயாரித்து வழங்க உதவும் தொழிலாளா்களுக்கு 40 சதவீத கட்டணத்தையும், உணவு தானியங்கள் மற்றும் பிற பொருள்கள் உள்ட்பட மற்ற அனைத்துச் செலவுகளையும் மத்திய அரசு ஏற்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT