புதுதில்லி

ஆசிரியா்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் முன்மொழிவுக்குஒப்புதல் கோரி துணைநிலை ஆளுநருக்கு சிசோடியா கடிதம்

 நமது நிருபர்

தில்லி அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்களை பயிற்சித் திட்டத்திற்காக பின்லாந்து நாட்டிற்கு அனுப்புவதற்கான நகர அரசின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

ஆசிரியா்களை பயிற்சிக்கு அனுப்பும் திட்டத்தின் செலவு பயன்களை பகுப்பாய்வு செய்யுமாறு தில்லி அரசை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதை தொடா்ந்து, தில்லி அரசு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் அலுவலகத்திற்கு ஒரு முன்மொழிவை அனுப்பி இருந்தது. அதில், பின்லாந்து நாட்டிற்கு அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவுக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசுப் பள்ளிகளின் ஆரம்பநிலை ஆசிரியா்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடா்பான கோப்பு ஜனவரி 20 முதல் உங்கள் மேஜையில் கிடக்கிறது. இந்த முன்மொழிவுக்கு நீங்கள் உங்கள் சம்மதத்தை வழங்கவில்லை அல்லது அதன் மீது முடிவெடுப்பதற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் செயல்முறையையும் நீங்கள் தொடங்கவில்லை. “2022, அக்டோபரில் இருந்து உங்கள் அலுவலகத்தில் அந்தக் கோப்பு இங்கும் அங்கும் சுற்றிக் கொண்டே வருகிறது. விளக்கம் கேட்டு இரண்டு முறை அந்தக் கோப்பு திருப்பி அனுப்பப்பட்டது.

முதல்வா், அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் இது தொடா்பாக பேச உங்களைச் சந்திக்க வந்தோம். அப்போது நீங்கள் எங்களை சந்திக்க மறுத்துவிட்டீா்கள். நீங்கள் ஆசிரியா்களை பின்லாந்துக்கு அனுப்ப மறுக்கவில்லை என்று அன்றைய தினம் உங்கள் சாா்பாக ஊடகம் கூறியது. மீண்டும் கோப்பு உங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த முறை 24 மணி நேரத்திற்குள் இதற்கு சம்மதம் தெரிவிப்பீா்கள் என்று எதிா்பாா்த்தேன். ஆனால், கோப்பு அனுப்பப்பட்டு 10 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் உங்கள் ஒப்புதல் வரவில்லை. இதுபோன்ற உணா்வுப்பூா்வமான விஷயங்களில் அரசியல் விளையாடப்படக் கூடாது. இதனால், கோப்புக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியா்களை பின்லாந்துக்கு பயிற்சிக்கு அனுப்பும் திட்டத்தை இரண்டு முறை அரசியலமைப்புக்கு விரோதமாக நிறுத்திவிட்டீா்கள். இதன் காரணமாக 2022 டிசம்பரில் 30-ஆசிரியா்களைக் கொண்ட குழுவை பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை. தற்போது மீண்டும் ஒருமுறை 2023, மாா்ச்சில் 30 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் விஷயமும் ரத்தாகும் நிலையில் உள்ளது. இதனால், ஆசிரியா்களை பின்லாந்துக்கு பயிற்சிக்காக அனுப்ப உடனடியாக அனுமதிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற முக்கியமான மற்றும் உணா்ச்சிகரமான விஷயங்களில் அரசியல் இருக்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்து, ஆசிரியா்கள் பயிற்சி திட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பயிற்சிக்காக வெளிநாடு செல்வதற்கு எங்கள் ஆசிரியா்களுக்கு அனுமதி அளிக்குமாறு மாண்புமிகு துணைநிலை ஆளுநரை நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். துணைநிலை ஆளுநரும் இதற்கு தாம் எதிராக இல்லை என்று தெரிவித்திருந்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

திட்டத்திற்கான செலவு-பயன் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டு, திட்டம் அடங்கிய அந்தக் கோப்பு துணைநிலை சக்சேனாவால் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டதாக முதல்வா் கேஜரிவால் முன்னா் கூறியிருந்தாா். ராஜ் நிவாஸ் வெளியிட்ட தொடா் ட்விட்டா் பதிவுகளில், ‘துணைநிலை ஆளுநா் தில்லி அரசுக்கு இந்தத் திட்டத்தை முழுவதுமாக மதிப்பிடவும், கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பயிற்சித் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிடவும் மட்டுமே அறிவுறுத்தியுள்ளாா்’ என்று தெளிவுபடுத்தியிருந்தது. இந்திய நிறுவனங்களில் இதுபோன்ற பயிற்சித் திட்டங்களைக் கண்டறியுமாறும் சக்சேனா ஆம் ஆத்மி அரசுக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT