புதுதில்லி

2023-24-இல் பொருளாதார வளர்ச்சி 6.8%: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

 நமது நிருபர்

நாட்டின் பொருளாதாரம் பரந்த அடிப்படையில் தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சிப் பாதையை எட்டும். 2023-24 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசின் பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உலக வங்கியும் (6.6%), ஆசிய வளர்ச்சி வங்கியும் (7.2 %) ஏறத்தாழ இதே நிலையை குறிப்பிட்டிருந்தன.
 தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.அனந்த் நாகேஸ்வரன் தலைமையிலான குழு உருவாக்கிய 2022-23-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார்.
 சுமார் 42 பக்கங்களைக் கொண்ட எண்ம அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:
 மறைந்த பிரதமர் வாஜ்பாய் ஆட்சி, பிரதமர் மோடி ஆட்சிக் காலம் ஒப்பிடப்பட்டுள்ளது. கடந்த 1998 முதல் 2002-ஆம் ஆண்டு வரை வாஜ்பாய் ஆட்சியில் அணுகுண்டு வெடிப்பு சோதனை மூலம் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, வட்டி விகிதம் கட்டுப்பாடு நீக்கம், தனியார்மயமாக்கல், வங்கிகளுக்கான சொத்து மீட்பு, தங்க நாற்கரம் (உள்கட்டமைப்பு), நிதிப் பற்றாக்குறை மேலாண்மைச் சட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 இதன் பலன் 2003 முதல் 2009-ஆம் நிதி ஆண்டுகளில் கிடைத்தது. பின்னர் 2014-ஆம் ஆண்டில் ஆதார் அடையாள அட்டை இணைப்பு, நிதி உள்ளடக்கம், ஜிஎஸ்டி முறைப்படுத்தல், திவால் சட்டம், தனியார் துறையுடன் பங்கேற்பு, வரி நிர்வாகச் சீர்திருத்தங்கள், செலவின மேலாண்மை, தற்சார்பு இந்தியா, பொது மின்னணு கட்டமைப்பு போன்ற சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2014 முதல் 2022 வரை நாடு பல்வேறு பொருளாதார சவால்களை சந்தித்தாலும், இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் நிதித் துறை வலுப்பெற்று நிதி இருப்பு நிலை மேம்பட்டுள்ளது. அரசுத் துறையிலும் தனியார் நிதி இருப்பிலும் இதே வளர்ச்சி நிலை ஏற்பட்டு முதலீடுகள் தாரளமாகக் கிடைக்கப் பெற்றன.
 குறிப்பாக, சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் மைக்ரோபொருளாதாரத்தைக் கையாண்டதில், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
 அடுத்த ஐந்தாண்டு காலத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும். சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சிக்கான சூழ்நிலையிலும், இடைப்பட்ட காலம் குறித்த ஆய்வில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக சித்தரிக்கப்பட்டு நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.
 மத்திய அரசின் மூலதன செலவும், தனியார் மூலதன செலவின அதிகரிப்பும், பெருநிறுவனங்களின் ஆண்டு வரவு - செலவு அறிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. இது நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
 ரஷியா -உக்ரைன் போர் நீடித்தாலும், சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கு வரம்புக்குள் கடந்த நவம்பர் மாதம் திரும்பியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. நிகழ் நிதியாண்டில் அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் பொருளாதார திட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு நேரடி வரி விதிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது. பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், வேலைவாய்ப்புகள் கிடைத்து சரக்குப் போக்குவரத்துச் செலவுகள் குறைந்து வருகின்றன. குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ச்சி சீரடைந்து வருகிறது. வாராக் கடன் ஐந்து சதவீதமாகக் குறைந்து வணிக வங்கிகளின் இரட்டை இலக்கு வளர்ச்சியாக உள்ளது.
 தனியார் நுகர்வு அதிகபட்சமாக உள்ளது. இது உற்பத்திச் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால், துறைகள்தோறும் திறன் பயன்பாடு விரிவடையும். பிரதமரின் விவசாயிகள் நல உதவித் திட்டம், வேளாண்மையில் தனியார் முதலீடு அதிகரிப்பு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், பயிர்க் காப்பீடு போன்றவை ஊரகப் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளது.
 இந்தியாவில் (2005 - 2020) 41.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை கூறுவதே இதற்கு எடுத்துக்காட்டாகும்.
 பொது மின்னணு தளங்கள் விரிவாக்கம், பொருள் உற்பத்திக்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு தொடர்ந்து வலுப்பெறும். இதனால், 2023-24 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6-6.8 சதவீதத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 எதிர்பார்க்கப்படும் சர்வதேச நிதி நெருக்கடிகளை நாடு கடக்கும்பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளில் 7.2 சதவீத வளர்ச்சியை தாண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT