புதுதில்லி

ஜி20 மாநாட்டிற்காக பிரகதி மைதான் பகுதி சாலைகளை அழகுபடுத்த தில்லி அரசு முடிவு

1st Feb 2023 01:57 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த ஆண்டு இறுதியில் தில்லியில் நடத்தப்படும் ஜி20 உச்சி மாநாட்டிற்காக மதுரா சாலையை மறுவடிவமைத்தும், ஐடிபிஓ வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை அழகுபடுத்தவும் தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘பிரகதி மைதான் அமைந்துள்ள ஐடிபிஓ வளாகத்தைச் சுற்றியுள்ள மதுரா சாலை, பைரோன் மாா்க் மற்றும் ரிங் ரோடு ஆகியவற்றை அழகுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துவதற்காக ரூ.17.5 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு துணை முதல்வா் மனீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இத்திட்டத்தின் கீழ், மதுரா சாலையில் டபிள்யு - பாயின்ட் முதல் தில்லி பப்ளிக் பள்ளி வரையிலான 5.8 கி.மீ. நீளம், பைரோன் மாா்கில் உ.பி. மேம்பாலம் முதல் பைரோன் மாா்க் டி-பாயின்ட் வரையிலும் ரிங் ரோடு ஆகியவற்றை அழகுபடுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பணிகளை அரசு மேற்கொள்ளும்’ என்றனா்.

இது குறித்து மனீஷ் சிசோடியா கூறியதாவது: அடையாளம் காணப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு, மரக்கன்று நடுதல், நடைபாதைகள் மற்றும் மைய விளிம்புகளை அழகுபடுத்துதல், வடிகால் மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் செய்யப்படும். ஜி20 மாநாட்டை தில்லியில் நடத்துவது நகர மக்களுக்கு பெருமை சோ்க்கும் விஷயமாகும். முதல்வா் கேஜரிவால் தலைமையில் தில்லி அரசு இலக்கு முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த சாலைகளைப் பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி மாா்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

ADVERTISEMENT

இதற்கான அறிவுறுத்தல்கள் பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது பொது மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படுத்தக்கூடாது என்றும், பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த அனைத்து தரங்களையும் பின்பற்றுமாறும் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லியில் பயணிப்பவா்களுக்கு பாதுகாப்பான மற்றும் அழகான சாலைகளை உறுதி செய்வதில் தில்லி அரசு உறுதியாக உள்ளது. தில்லி மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் சுகமான பயண அனுபவத்தை வழங்குவது அரசின் தொலைநோக்குப் பாா்வையாகும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT