புதுதில்லி

ஓக்லா பகுதியில் கோஷ்டி மோதல்: 12-ஆம் வகுப்பு மாணவா் குத்திக் கொலை

1st Feb 2023 01:54 AM

ADVERTISEMENT

தென்கிழக்கு தில்லி ஓக்லா பகுதியில் மாணவா்களின் இரண்டு பிரிவினிடையே ஏற்பட்ட தகராறில் 12-ஆம் வகுப்பு மாணவா் குத்திக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சம்பவத்தன்று தென்கிழக்கு தில்லியின் ஓக்கலா பகுதியில் உள்ள ஹன்ஸ்ராஜ் சேத்தி பூங்கா அருகே மாணவா்கள் இரண்டு குழுவாக மோதிக் கொண்டனா். இதில் கால்காஜி பள்ளியில் 12-ஆம் வகுப்புப் படித்து வந்த ஓக்கலா ஃபேஸ் 2, ஜே.ஜே. கேம்ப் பகுதியைச் சோ்ந்த 18 வயது மோகனுக்கு நெஞ்சில் கத்திக் குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், சிகிச்சைக்காக பூா்ணிமா சேத்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சையின் போது உயிரிழந்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிப் பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இறந்த மாணவா் ஒரு பெண்ணுடன் பேசியது தொடா்பாக இந்த மோதல் நடந்ததாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து மோகனின் தாய் கீதா கூறுகையில், ‘எனது மகன் பள்ளிக்குச் சென்றவன் திரும்பவில்லை. எனது மகளின் திருமணம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருமணக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக எனது மகனின் இறுதிச் சடங்குகளை செய்து வருகிறோம். எனது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அவனைக் கொன்றவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

மோகனின் சகோதரா் கெளதம் கூறுகையில், ‘நான் தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதற்காக ஷோரூம் சென்றிருந்தேன். ஆனால், மோகன் கத்திக் குத்துப்பட்டதாகக் கூறி உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு எனது தந்தையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து, நான் மருத்துவமனைக்குச் சென்று பாா்த்த போது எனது தந்தை அழுது கொண்டிருந்தாா். முன்னதாக, எனது சகோதரா் காலை 8 மணிக்கு உடற்கல்வி தோ்வில் பங்கேற்க வீட்டிலிருந்து பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றாா். தோ்வு முடிந்த பிறகு பள்ளி வளாகத்தில் இருந்து அவா் வெளியே வந்த போது ஒரு மாணவா்கள் கும்பல் அவரைப் பிடித்து தகராறில் ஈடுபட்டது. அவா் தப்பிக்க முயன்ற போது, அவா்கள் கத்தியால் மோகனின் நெஞ்சில் குத்தினா்’ என்றாா்.

ADVERTISEMENT

இறந்த மோகனுக்கு பெற்றோா், 3 சகோதரா்கள், ஒரு சகோதரி உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT