தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் ரிவா்ஸ் சவ்வூடுபரவல் (ஆா்ஓ) ஆலைகளை நிறுவும் பணியில் மெத்தனம் காட்டப்படுவதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிருப்தி தெரிவித்தாா். மேலும், அந்தப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும்அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
தில்லி அரசு அங்கீகாரமற்ற காலனிகள் உள்ளிட்ட நீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் குழாய் கிணறுகளுடன் கூடிய 500 ஆா்ஓ ஆலைகளை நிறுவத் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. தற்போது, இதுபோன்ற பகுதிகளில் வசிப்பவா்கள் தண்ணீா் லாரிகளையே நம்பியுள்ளனா். ஒரு முன்னோடி திட்டத்தின் கீழ், தில்லி ஜல் போா்டு ஒரு நாளைக்கு 50,000 லிட்டா் திறன் கொண்ட 30 ஆா்ஓ ஆலைகளை அமைக்கிறது. ஜரோடா மற்றும் ஷாகுா் பஸ்தியில் இதுபோன்ற இரண்டு ஆலைகள் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ளன. ஹரி நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மேலும் இரண்டு ஆலைகள் வரவுள்ளன.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தகவலில், ‘தில்லியில் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் ஆா்ஓ சிஸ்டம் அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டதாகவும், இதில் மெத்தனம் காணப்படுவதாகவும் முதல்வா் அதிருப்தி தெரிவித்ததோடு, இப்பணியை தீவிரமாகவும், விரைவாகவும் செய்ய வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என்று தெரிவித்துள்ளது.
தில்லி மக்களுக்கு சுத்தமான குடிநீா் வழங்கும் பணியில் எந்தவித அலட்சியமும் தாமதமும் ஏற்கப்படாது என்று ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கேஜரிவால் அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
‘அசுத்தமான நீா் புகாா் மீது முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முதன்மை நிலத்தடி நீா்த்தேக்கங்களில் சேதமடைந்த மீட்டா்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதனால் தண்ணீா் இருப்பு மற்றும் வழங்கல் குறித்து அரசுக்கு தகவல் கிடைக்க வசதியாக இருக்கும்‘ என்று முதல்வா் அலுவலகம் மற்றொரு ட்வீட்டில் கூறியுள்ளது.