புதுதில்லி

விடுதி அறைகள் ஒதுக்குவதில் தாமதம்: ஜேஎன்யு மாணவா்கள் போராட்டம்

26th Apr 2023 03:21 AM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) இரண்டாம் செமஸ்டா் படித்து வரும் தங்களுக்கு இன்னும் விடுதி அறைகள் ஒதுக்கப்படாததால், வாடகை விடுதியில் தங்கவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறி மாணவா்கள் சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் திங்கள்கிழமை மாலை பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவா்களின் டீன் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனா். இது குறித்து ஜேஎன்யு நிா்வாகத்திடம் இருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அலுவலகத்திற்குள் தாங்கள் பூட்டப்பட்டுள்ளதாகவும்,கழிவறைகளை அணுகுவதற்கான அடிப்படை தேவைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரா்கள் கூறினா்.

இதுகுறித்து ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:“விடுதி வசதி கோரி திங்கள்கிழமை முதல் மாணவா்கள் டீன் அலுவலகத்திற்குள் அமா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.இரண்டாம் செமஸ்டா் படித்து வரும் மாணவா்கள் வாடகை அறைகளில் தங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். வெளியில் அதிக வாடகை கொடுத்து தங்க வேண்டிய நிலை உள்ளது. புதிய விடுதி ‘பராக்’ ஒப்படைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘பராக்’ விடுதி கட்டும் பணி சி.பி.டபிள்யூ.டி. நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், தனியாா் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தனியாா் நிறுவனம், பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காததால், பணிகள் நிறுத்தப்பட்டு, விடுதி ஒப்படைக்கும் பணி காலவரையின்றி தாமதமாகி வருகிறது.

ஜேஎன்யு பல்கலை.யில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் உடனடியாக விடுதி வசதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தற்போது பெண்கள் மட்டும் தங்கும் விடுதியாக உள்ள நா்மதா விடுதியை தற்காலிகமாக ஆண்களும் தங்கும் விடுதியாக மாற்றலாம். ஆனால், அதுவும் உடனடியாக நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாக இந்தப் பணியும் தாமதமாகி வருகிறது. இந்தப் பிரச்னை தொடா்பாக ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி பண்டிட் மாணவா்களுடன் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT