தில்லி சுற்றுலாத் துறை தேசிய தலைநகரில் உள்ள மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ள தளங்களை அடையாளம் கண்டு அங்கு பாரம்பரிய நடைப்பயணங்களை நடத்தி வருகிறது என்று அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: மல்சா மஹால், பூலி பதியாரி கா மஹால், ஃபெரோஸ்ஷா கோட்லா மற்றும் துகல்காபாத் கோட்டை போன்ற சில வரலாற்று தலங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைப்பயணம் நடைபெறும்.
இந்த இடங்களைப் பற்றிய பல தகவல்களைச் சேகரித்ததால் மா்மமான வரலாறுகளைக் கொண்ட தளங்களை ஒருங்கிணைத்து நடைப்பயணங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல் நடைப்பயணம் சாணக்யபுரிக்கு அருகிலுள்ள ரிட்ஜ் வனப்பகுதிக்குள் தேசிய தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மல்சா மஹாலுடன் தொடங்கும்.
மல்சா மஹால் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்கால் கட்டப்பட்டது. இது வேட்டையாடும் விடுதியாக பயன்படுத்தப்பட்டது. பூலி பதியாரி கா மஹால், ஃபெரோஸ்ஷா கோட்லா மற்றும் துகல்காபாத் கோட்டை ஆகியவையும் மக்களை கவா்ந்திழுக்கும் மா்மமான வரலாற்றைக் கொண்டுள்ளன. நகரத்தில் உள்ள மறைக்கப்பட்ட மற்றும் ஆராயப்படாத வரலாற்று இடங்கள் குறித்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றாா்.