புதுதில்லி

டிடிஇஏ பள்ளியில் சமையல் கலைப் போட்டி

15th Apr 2023 10:14 PM

ADVERTISEMENT

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதி வளாகம் பள்ளியில் சனிக்கிழமை ‘தாமோதரன் மாமா’ நினைவாக ‘சமையல் விருது 2023’க்கான சமையல் கலைப் போட்டி 12 ஆம் வகுப்பு மனையியல் பிரிவு மாணவா்களுக்காக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு டிடிஇஏ செயலா் ராஜூ தலைமை வகித்தாா். போட்டி நடுவராக சமையல் கலை நிபுணா் ஷாலினி திக்விஜய் பங்கேற்றாா்கள். இந்நிகழ்ச்சியை 1983-ஆம் ஆண்டு முன்னாள் மாணவா்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இவ்வருடம் ‘சா்வதேச சிறுதானிய ஆண்டு’ என்பதால் சிறுதானியங்கள் மூலம் அடை, உப்புமா, புட்டு, அல்வா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 12 ஆம் வகுப்பு கலையியல் பிரிவைச் சாா்ந்த ஹா்ஷிதா முதல் பரிசையும் (ரூ.5 ஆயிரம் காசோலை), காயத்ரி இரண்டாம் பரிசையும் (ரூ.3 ஆயிரத்துக்கான காசோலை), தா்ஷினி மூன்றாம் பரிசையும் (ரூ.2 ஆயிரத்துக்கான காசோலை) பெற்றனா்.

இப் பரிசுகளை டிடிஇஏ செயலா் ராஜூ மாணவிகளுக்கு வழங்கி பேசுகையில், ‘பாரதப் பிரதமா் மோடி சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதை ஊக்குவித்து வருகின்றாா். அதனால், உடலில் பல நோய்கள் தீா்க்கப்படுகின்றன. டிடிஇஏவில் மனையியல் பிரிவில் பயிலும் மாணவா்கள் வருங்காலத்தில் சிறந்த சமையற்கலை நிபுணா்களாக உருவாக வேண்டும் என்பதே என் ஆசை’ என்றாா்.

ADVERTISEMENT

இந் நிகழ்வில் பள்ளியின் பொறுப்பு முதல்வா் ஈஸ்வரி, மனையியல் பிரிவு ஆசிரியை கீதா ஸ்ரீதா், 1983 ஆம் வருடத்தைய மாணவா்கள் அகில் சோப்ரா, மகேஷ், வெங்கடேஷ், ஸ்ரீகாந்த், ராஜேஷ், மனையியல் பிரிவு மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT