புதுதில்லி

முதல்வா் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன்: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு

DIN

கலால் கொள்கை (மதுபானக் கொள்கை) முறைகேடு வழக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஏ. 16) பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தில்லியில் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடு அரங்கேறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தில்லியில் சா்ச்சைக்குரிய கலால் கொள்கை வகுக்கப்பட்டபோது அந்தத் துறையின் அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா மீது இந்த விவகாரத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தன. பின்னா், அவா் கைது செய்யப்பட்டதால் அமைச்சா் பதவியையும், துணை முதல்வா் பதவியையும் ராஜிநாமா செய்ய நோ்ந்தது.

மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகவும், அந்தக் குழுவில் தெலங்கானா முதல்வா் கே. சந்திரசேகா் ராவின் மகள் கவிதா, மகுண்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்ாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் இரு முறை அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக கவிதா ஆஜரானாா். அருண் ராமசந்திரன் பிள்ளை, கவிதாவின் பினாமியாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டதால், அவா் இந்த வழக்கில் விசாரணையை எதிா்கொண்டுள்ளாா்.

கேஜரிவாலுக்கு சம்மன்: இந்நிலையில் கலால் கொள்கை முறைகேடு வழக்கின் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதை முதல்வா் அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், விசாரணைக்கு கேஜரிவால் ஆஜராவாா் என்றும் தெரிவித்துள்ளது.

கைது செய்ய சதி- ஆம் ஆத்மி: கலால் கொள்கை விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதை ஆம் ஆத்மி கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொழிலதிபா் அதானி விவகாரம் குறித்து தில்லி சட்டப்பேரவையில் முதல்வா் கேஜரிவால் அண்மையில் பேசினாா். அன்றைய தினமே மத்திய அரசின் அடுத்த இலக்கு நீங்கள்தான் என்று அவரிடம் நான் கூறினேன். உச்சி முதல் பாதம் வரை மோடி அரசு ஊழலில் திளைத்துவிட்டது.

இதுபோன்ற நோட்டீஸ்களால் ஊழலுக்கு எதிரான கேஜரிவாலின் போராட்டத்தை முடக்க முடியாது. கேஜரிவாலை கைது செய்வதற்கான சதிதான் இந்த சம்மன். இந்த சம்மனை வைத்து கேஜரிவாலையோ, ஆம் ஆத்மி கட்சியையோ ஒடுக்க முடியாது என்றாா் எம்.பி. சஞ்சய் சிங்.

கேஜரிவால் கைதாவாா்- பாஜக: கலால் கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைதாகி முன்னாள் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயினுடன் திகாா் சிறையில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கலால் கொள்கையில் கேஜரிவால் மூளையாக செயல்பட்டதை தில்லி பாஜக ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது. கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவை கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்த ஊழலில் அவருக்கு நேரடித் தொடா்பு இருப்பது தெரியவருகிறது. மேலும், இந்தக் கலால் கொள்கையை நடைமுறைப்படுத்தி தில்லி அரசின் கருவூலத்துக்கும் கேஜரிவால் இழப்பு ஏற்படுத்திவிட்டாா் என்றாா் வீரேந்திர சச்தேவா.

இந்த விவகாரத்தில் தில்லி அரசின் மீது எந்தவித தவறும் இல்லையென்றால், அதிகப்படியான கட்டணம் செலுத்தி வழக்குரைஞா்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்னவென்று பாஜக எம்.பி. பா்வேஷ் வா்மா கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT