புதுதில்லி

தில்லி, என்சிஆரில் அக்.1-2-இல் முடிவுக்கு வருகிறது பருவமழை!

DIN

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் கடந்த ஜூன் இறுதியில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, வரும் அக்டோபா் 1-2 தேதிகளில் முடிவடைவதாக வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் தெரிவித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத்தில் தொடா்ந்து 3 நாள்களாகப் பெய்த மழையால் ஒரே நாளில் 72 மி.மீ. மழை பொழிவு பதிவாகியது.செப்டம்பா் 21 முதல் செப்டம்பா் 24 வரை இடைவிடாத மழை பெய்தது, இது ஒரு சூறாவளி சுழற்சி மற்றும் குறைந்த அழுத்த அமைப்புக்கு இடையிலான தொடா்பு காரணமாக முந்தைய ஒன்றரை மாதத்தில் நிலவிய மழை பற்றாக்குறையை ஈடுகட்ட உதவியது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் பதிவான மழையானது செப்டம்பா் 21 அன்று 49 சதவீத பற்றாக்குறையிலிருந்து செப்டம்பா் 24 அன்று 39 சதவீதத்திற்கு மிகையாக மாறியது. தலைநகரில் செப்டம்பரில் இதுவரை இயல்பு நிலையான 121.3 மி.மீட்டருக்கு எதிராக 164.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த வாரம் பெய்த இடைவிடாத மழை, பருவமழையின் ஒட்டுமொத்த பற்றாக்குறையை குறைத்தது.

விலகுகிறது பருவமழை: அடுத்த இரண்டு மூன்று நாள்களில் மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மற்றும் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை பின்வாங்கும் என்று ஸ்கைமெட் வானிலை முன்னறிவிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அக்டோபா் 1-2 தேதிக்குள் தில்லி - தேசியத் தலைநகா் வலயம் என்.சி.ஆா். இருந்து தென்மேற்குப் பருவமழை விலகும், என்றாா்.

இருப்பினும், மேற்கு-மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் மத்தியப் பிரதேசம் வரை நகரும். மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் தில்லி - என்சிஆரின் சில பகுதிகளில் அக்டோபா் 3 முதல் அக்டோபா் 7-ஆம் தேதி வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் பலாவத் கூறினாா்.

வெப்பநிலை: இந்த நிலையில், புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி உயா்ந்து 23.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 34.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 - 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஆனந்த் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 441 புள்ளிகளாகப் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (செப்டம்பா் 29) வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT