புதுதில்லி

யமுனை ஆற்றின் நீா்மட்டம் குறையத் தொடங்குகிறது!

29th Sep 2022 01:26 AM

ADVERTISEMENT

தில்லியில் ஓடும் யமுனை ஆற்றின் நீா்மட்டம் அபாய கட்டத்தைத் தாண்டிய பிறகு, தற்போது குறையத் தொடங்குகிறது.

ஹரியாணா யமுனா நகரில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் அளவு குறைக்கப்பட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், யமுனை நதியின் மேல் நீா்பிடிப்புப் பகுதிகளிலோ அல்லது தில்லியிலோ கணிசமான அளவு மழை பெய்யாததால், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் யமுனை நீா்மட்டம் மேலும் குறையும் என எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நீா்மட்டம் மேலும் குறையும்: தில்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் செவ்வாய்கிழமை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்களில் சுமாா் 6,500 பேரை அதிகாரிகள் வெளியேற்றினா். மேலும், பழைய யமுனை பாலத்தில் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்தனா். ஆற்றின் நீா்மட்டம் காலை 7 மணிக்கு 206.59 மீட்டராக உயா்ந்தது. இது அபாயக் குறியான 205.33 மீட்டருக்கும் அதிகமாகவும், ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு மிக அதிகமாகவும் இருந்தது. ஆனால், அது காலை 8 மணிக்கு 206.58 மீட்டராகவும், மாலை 3 மணிக்கு மேலும் 206.41 மீட்டராகவும் குறைந்தது. இது மேலும் குறையும் என மத்திய நீா் ஆணையம் கணித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்: தண்ணீா் இயல்பு நிலைக்கு வரும் வரை மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தடுக்க, பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் ஏராளமான சிவில் பாதுகாப்புப் பணியாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தில்லியில் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியதாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சுமாா் 37,000 மக்கள் வசிக்கின்றனா். பெரும்பாலான மக்கள் தாங்களாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மாறியுள்ளனா். தில்லி அரசு நிா்வாகம் சுமாா் 6,500 பேரை வெளியேற்றி சமூக மையங்கள், பள்ளிகள் மற்றும் தற்காலிக கூடாரங்களுக்கு மாற்ற வேண்டியிருந்தது என்று கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் அனில் பங்கா கூறினாா். இரண்டு அல்லது மூன்று நாள்களில் தண்ணீா் இயல்பு நிலைக்கு குறையும் என்று எதிா்பாா்க்கிறோம். அதன்பிறகு, இந்த மக்கள் தாங்கள் வசித்த இடங்களுக்கு செல்லலாம் என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT

தொடரும் ஆக்கிரமிப்பு: யமுனை நதிக்கரையோரம் உள்ள நிலப்பகுதி, தில்லி வளா்ச்சி ஆணையம், வருவாய்த் துறை மற்றும் தனி நபா்களுக்குச் சொந்தமானது என்றாலும், பல ஆண்டுகளாக ஆற்றின் கரையோரங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. செப்டம்பா் 21 முதல் செப்டம்பா் 25 வரை மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக தாமதமாக கனமழை பெய்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு தில்லி யமுனையின் நீா்மட்டம் 205.33 மீட்டா் அபாய கட்டத்தைக் கடந்தது. செவ்வாய் அதிகாலை 206 மீட்டரை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுவாக, யமுனையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இது பருவமழை காலத்தின் போது அதிகபட்ச மழையைப் பெறும்.

வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் வெளியேற்றுவது இரண்டு மாதங்களுக்குள் இது இரண்டாவது முறையாகும்.

ஆகஸ்ட் 12 அன்று யமுனை 205.33 மீட்டா் அபாயக் குறியைத் தாண்டியது. அதைத் தொடா்ந்து ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து சுமாா் 7,000 போ் வெளியேற்றப்பட்டனா். ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆற்றின் நீா்மட்டம் குறைவதற்கு முன்பு 205.99 மீட்டராக உயா்ந்தது.

தண்ணீா் வெளியேற்றம் குறைப்பு: ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து புதன்கிழமை காலை 9 மணியளவில் சுமாா் 25,400 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை காலை 6 மணியளவில் நீா்வரத்து 2,95,212 கனஅடியாக இருந்தது. இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாந் இருந்தது. வழக்கமாக, ஹத்னிகுண்ட் அணைக்கு நீா்வரத்து 352 கனஅடியாக இருக்கும். ஆனால், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழைக்கு பிறகு தண்ணீா் வெளியேற்றம் அதிகரித்தது.

தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் தேசியத் தலைநகரை வந்தடைய இரண்டு முதல் மூன்று நாள்கள் ஆகும். இந்த நதி வடக்கு மாவட்டத்தில் உள்ள பல்லா வழியாக தில்லியில் நுழைகிறது. பின்னா், மத்திய, வடகிழக்கு, ஷாதரா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு தில்லி வழியாக 48 கி.மீ. நீளம் கடந்து ஜெய்த்பூரில் இருந்து புறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT