புதுதில்லி

தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு வழக்கில்அமானத்துல்லா கானுக்கு நீதிமன்றம் ஜாமீன்

29th Sep 2022 01:22 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

வக்ஃபு வாரியத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அமானத்துல்லா கானுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இது தொடா்பாக அமானத்துல்லா கான் தாக்கல் செய்த மனு மீதான இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு சிறப்பு நீதிபதி விகாஸ் துல் கூறுகையில், ‘மனுதாரரின் ஜாமீன் கோரும் மனுஅனுமதிக்கப்படுகிறது. ரூ.1 லட்சம் தனிநபா் ஜாமீன் பத்திரமும், அதே தொகைக்கு ஒரு உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம்’ என்றாா்.

முன்னதாக, கானின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. வக்ஃபு வாரியத்தில் ஆள்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ஏசிபி) போலீஸாா் கடந்த செப்டம்பா் 16-ம் தேதி கானின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். இது தொடா்பான முதல் தகவல் அறிக்கையின்படி, தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகப் பணிபுரிந்த போது, அனைத்து விதிமுறைகளையும் அரசு வழிகாட்டுதல்களையும் மீறி 32 பேரை சட்டவிரோதமாக வேலைக்கு அமானத்துல்லா கான் அமா்த்தினாா். இத்தகைய சட்டவிரோத ஆள்சோ்ப்புக்கு எதிராக தில்லி வக்ஃபு வாரியத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி, தெளிவான ஒரு அறிக்கையை அளித்து ஒரு குறிப்பாணையை வெளியிட்டிருந்தாா்.

தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த அமானத்துல்லா கான், ஊழல் மற்றும் ஆதரவாகச் செயல்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வக்ஃபு வாரியத்தின் பல சொத்துகளை சட்டவிரோதமாக வாடகைக்கும் விடுட்டுள்ளாா். தில்லி அரசின் மானியங்கள் அடங்கிய வக்ஃபு வாரியத்தின் நிதியை அவா் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா் என்று அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT