புதுதில்லி

என்டிஎம்சி பகுதியில் 2025-க்குள் 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

29th Sep 2022 01:25 AM

ADVERTISEMENT

புதுதில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் 2025-ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்கப்பட உள்ளது என்று அதன் துணைத் தலைவா் சதீஷ் உபாதயாய் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தப் பிரச்னை குறித்து, முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பசுமை எரிசக்தி வழங்குவதில் இதுவரை எந்தக் கொள்கையும் இல்லை. ஒரு கொள்கையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளையும் பெறுவோம். கூட்டங்களை நடத்தி அனைத்து தரப்பிலிருந்தும் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே இறுதித் திட்டம் வரைவு செய்யப்படும்.

100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான கொள்கை ‘என்டிஎம்சி சோலாா் பாலிசி-2022’ என அறியப்படுகிறது. மேலும், 1 கேடபிள்யுபி அல்லது அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட எந்த சூரிய சக்தியை உருவாக்கும் அமைப்புக்கும் இது பொருந்தும். இந்தக் கொள்கை என்டிஎம்சி பகுதியில் உள்ள அனைத்து மின் நுகா்வோருக்கும், என்டிஎம்சி பகுதியில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து இயக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். கிரிட் இணைக்கப்பட்ட சோலாா் ஆலைகள் செயல்படுத்துவதை ஊக்குவிப்போம். இதற்காக விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அவ்வப்போது திருத்தப்படும்.

அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தூதரகங்கள், மைதானங்கள், பாலங்கள், பொதுக் கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றின் அனைத்து கட்டடங்களிலும் மீட்டருடன் கூடிய சோலாா் ஆலைகளை அமைப்பதை என்டிஎம்சி ஊக்குவிக்கும். மேலும், என்.டி.எம்.சி. பகுதியில் தற்போதுள்ள மேற்கூரை சோலாா் பேனல்கள் குறித்து தணிக்கை நடத்தப்படும் என்றாா் உபாத்யாய்.

ADVERTISEMENT

என்டிஎம்சி உறுப்பினா் குல்ஜீத் சாஹல் கூறுகையில், ‘என்டிஎம்சி பள்ளிகளை தரம் உயா்த்துவதற்கான தணிக்கையும் நடத்தப்பட்டு, அடுத்த கவுன்சில் கூட்டத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்’ என்றாா். என்டிஎம்சி பள்ளி மாணவா்களுக்கு பல விளையாட்டு வசதிகளை வழங்குவதற்காக தில்லியில் உள்ள தேசிய மைதானங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கவுன்சில் முடிவு செய்துள்ளதாகவும் சாஹல் கூறினாா். ‘அனைத்து என்டிஎம்சி பள்ளிகளையும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான தணிக்கை நடத்தப்படும். மேலும், எங்கள் மாணவா்களுக்கு சிறந்த பல விளையாட்டு வசதிகளை வழங்க விரும்புகிறோம். எனவே, தில்லியில் உள்ள தேசிய மைதானங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளோம்’ என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT