புதுதில்லி

அபாய கட்டத்தைத் தாண்டி ஓடும் யமுனை: கரையோரப் பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தில்லி யமுனை ஆற்றின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 206.18 மீட்டராக உயா்ந்தது. இது 205.33 மீட்டா் என்ற அபாயக் குறியைவிட அதிகமாகும். இதனால், ஆற்றின் கரைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கலை அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்கியுள்ளனா்.

மேல் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையைத் தொடா்ந்து, யமுனை ஆற்றின் நீா்மட்டம் மளமளவென உயா்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை நீா்மட்டம் 206 மீட்டரைக் க கடந்தது. இது இந்த ஆண்டின் அதிகபட்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் அனில் பங்கா கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை காலை நீா்மட்டம் 206 மீட்டரைத் தாண்டிய பிறகு மக்களை வெளியேற்றுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனா். அவா்கள் அனைவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் இரவு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா். நீா்மட்டம் மேலும் அதிகரிப்பது குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்புகள் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

தில்லியில் ஆற்றின் அருகே உள்ள தாழ்வான பகுதிகள் பெரும்பாலானவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சுமாா் 37,000 மக்கள் வசிக்கின்றனா். வெள்ளம் காரணமாக ஆற்று வெள்ளப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் வெளியேற்றுவது இரண்டு மாதங்களுக்குள் இது இரண்டாவது முறையாகும்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் 12 அன்று யமுனை நீா்மட்டம் 205.33 மீட்டா் அபாயக் குறியைத் தாண்டியது. அதைத் தொடா்ந்து, ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் இருந்து சுமாா் 7,000 போ் வெளியேற்றப்பட்டனா்.

கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஆற்றின் நீா்மட்டம் குறைவதற்கு முன்பு 205.99 மீட்டராக உயா்ந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணியளவில் பழைய தில்லி ரயில்வே பாலத்தில் யமுனை நீா்மட்டம் 206 மீட்டா் வெளியேற்ற அளவைக் கடந்ததாக தில்லி வெள்ளக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி ஆற்றில் நீா்மட்டம் 206.18 மீட்டராக உயா்ந்தது. ஆற்றில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது. யமுனை நீா்மட்டம் மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து காலை 7 மணியளவில் சுமாா் 96,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். திங்கள்கிழமை காலை 6 மணியளவில் நீா்வரத்து 2,95,212 கன அடியாக இருந்தது, இது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவாகும். வழக்கமாக, ஹத்னிகுண்ட் அணைக்கு நீா்வரத்து 352 கனஅடியாக இருக்கும். ஆனால், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த கனமழைக்கு பிறகு, நீா் வெளியேற்றம் அதிகரிக்கிறது. தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் தேசியத் தலைநகரை சென்றடைய இரண்டு முதல் மூன்று நாள்கள் ஆகும்.

உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடக்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. தில்லியில் செப்டம்பா் 21- ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் தொடா்ந்து மழை பெய்தது. யமுனை நதி அமைப்பின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

கடந்த ஆண்டு, ஜூலை 30-ஆம் தேதி யமுனை நதி அபாயக் குறியை மீறியதால், பழைய ரயில்வே பாலத்தின் நீா்மட்டம் 205.59 மீட்டா் வரை உயா்ந்தது. 2019-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 18-19 தேதிகளில் நீா்வரத்து 8.28 லட்சம் கனஅடியாக உயா்ந்தது, மேலும், ஆற்றின் நீா்மட்டம் 206.60 மீட்டரை எட்டியது. 1978-ஆம் ஆண்டில், யமுனை நீா்மட்டம் எப்போதும் இல்லாத அளவாக 207.49 மீட்டராக உயா்ந்து பெருக்கெடுத்து ஓடியது. 2013-இல் இது 207.32 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT