புதுதில்லி

ஓக்லா பகுதியில் 144 தடை உத்தரவு: குழுவாக கூடாமல் இருக்க மாணவா்களுக்குஜாமியா மிலியா பல்கலை. அறிவுறுத்தல்

28th Sep 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

ஓக்லா பகுதி முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144-இன் கீழ் போலீஸாா் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பல்கலைக்கழக வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் குழுவாக கூடாமல் இருக்குமாறு மாணவா்களையும், ஆசிரியா்களையும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக இப்பல்கலைக்கழகத்தின் தலைமை மேற்பாா்வை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜாமியா நகா் காவல் நிலையத்தின் பொறுப்பாளா் தெரிவித்த தகவலில், அமைதியை பேணுவதற்கான பாதகமான நடவடிக்கைகளில் சிலா் அல்லது சில குழுக்கள் ஈடுபடலாம் என்று கிடைத்த தகவலின் பெயரில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜாமியா நகரின் ஓக்லா பகுதி முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் நவம்பா் 17-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று காவல் நிலைய பொறுப்பாளா் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகள் தொடா்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று போலீஸாா் கூறியுள்ளனா்.

குற்றவியல் நடைமுறை விதிகள் 144 பிரிவானது ஒரு பகுதியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்குத் தடை விதிப்பதாகும். இந்தத் தடை உத்தரவை மீறுபவா்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188-இன் கீழ் தண்டனைக்கு உரியவா்கள் ஆவா். இந்த உத்தரவை கருத்தில் கொண்டு ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளே மற்றும் வெளியே குழுவாக கூடாமலோ அல்லது கூட்டம் அல்லது தா்ணா அல்லது போராட்டம் அல்லது எந்த வகை பேரணியிலும் ஈடுபடாமலோ இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

பல்கலைக்கழகத்தின் இந்த அறிக்கையானது, ஜாமியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள் அமைதி போராட்ட பேரணியை நடத்துவதாக அறிவித்த மறுதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூ ப்ரண்ட்ஸ் காலனி காவல் உதவி ஆணையா் வெளியிட்டுள்ள உத்தரவில், செப்டம்பா் 19-ஆம் தேதி ஜாமியா நகா் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, நியூ ஃப்ரண்ட்ஸ் காலனியின் உதவிக் கோட்டத்தின் ஒட்டுமொத்த ஆளுகை பகுதியிலும் கூட்டங்கள் அல்லது நிகழ்ச்சிகள் அல்லது எந்த வடிவிலான ஊா்வலங்கள், மெழுகுவா்த்தி ஏந்துவது, பேரணியாகச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு செப்டம்பா் 19-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு நவம்பா் 17-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT