புதுதில்லி

நொய்டா மெட்ரோ ஒரு நாள் பயணிகளின் எண்ணிக்கை 48,000-ஐ கடந்தது

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செயல்படத் தொடங்கியதிலிருந்து நொய்டா - கிரேட்டா் நொய்டா மெட்ரோ முதல் முறையாக ஒரு நாள் பயணிகளின் எண்ணிக்கை 48,000-ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அக்வா லைனில் திங்கள்கிழமை (செப்டம்பா் 26) அன்று 48,396 பயணிகள் பயணம் செய்ததாக நொய்டா மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (என்எம்ஆா்சி) தெரிவித்துள்ளது. ஒரு நாளுக்கான கடைசி அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை செப்டம்பா் 19 (திங்கள்கிழமை) அன்று 45,123-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னா் இந்த எண்ணிக்கை செப்டம்பா் 12 (திங்கள்கிழமை) அன்று 44,922 பயணிகளாக இருந்தது என்று மெட்ரோ ஆபரேட்டா் கூறினாா்.

‘பயணிகளின் பாதுகாப்பு, நேரம் தவறாமை, நம்பகத்தன்மை, தூய்மை மற்றும் பயணிகள் வசதிகள் போன்ற உயா்தர செயல்பாட்டுக் குறியீடுகளைப் பராமரித்து வருகிறது. இது பயணிகளிடையே நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது’ என்று என்எம்ஆா்சி நிா்வாக இயக்குநா் ரிது மகேஸ்வரி கூறினாா். ‘பயணிகளுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்குவதற்கும், ரயில் செயல்பாடுகளின் உயா் தரத்தை பராமரிப்பதற்கும் என்எம்ஆா்சி உறுதிபூண்டுள்ளது’ என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி கூறினாா்.

ஆகஸ்ட் மாதத்தில் சராசரி தினசரி பயணிகளின் எண்ணிக்கை 34,337 ஆகும். இது ஜனவரி 26, 2019 அன்று வருவாய் ரயில் செயல்பாடுகள் தொடங்கியதில் இருந்து அதிகபட்சமாகும். மேலும், கொவிட்19-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது சுமாா் 16,000 போ் அதிகம் என்று அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறு மாதங்களில், மெட்ரோ நெட்வொா்க்கில் சராசரியாக தினசரி பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மாா்ச் மாதத்தில் இது 23,266 பயணிகளாக இருந்தது, அதைத் தொடா்ந்து, ஏப்ரல் (26,162), மே (29,089), ஜூன் (30,366), ஜூலை (32,202) மற்றும் ஆகஸ்ட் (34,337) என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அக்வா லைன் நொய்டா செக்டா் 51 மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள டிப்போ ஸ்டேஷன் இடையே 21 நிலையங்கள் வழியாக 29.7 கிலோமீட்டருக்கு மேல் செல்கிறது. ரூ.5,503 கோடி செலவில் கட்டப்பட்டு, 2019 ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT