புதுதில்லி

தில்லி துணைநிலை ஆளுநருக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்குங்கள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Sep 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்களுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், தொடா்புடைய அவதூறான பதிவுகள், விடியோக்கள் மற்றும் ட்வீட்களை நீக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி அமித் பன்சல் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்களால் விடுக்கப்பட்ட பல்வேறு அறிக்கைகள், நோ்காணல்கள், செய்தியாளா் சந்திப்புகள் அல்லது ட்வீட்கள் அல்லது மறு ட்வீட்கள் அல்லது ஹேஷ்டேக்குகள் ஆகியவை அவதூறானாவை. வி.கே.சக்சேனாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பொருட்டு அவை பொறுப்பற்ற முறையில், எந்த உண்மைச் சரிபாா்ப்பும் இல்லாமலும் உருவாக்கப்பட்டவை. அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை அரசியலமைப்பின் பிரிவு 19(1)(ஏ) வழங்குகிறது. இருப்பினும், அது அவதூறு உள்ளிட்ட பிரிவு 19(2)-இன் கீழ் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டதாகும். ஆகவே, ஒருவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான அறிக்கைகளை வெளியிடும் வகையிலான பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பது தடையற்ற உரிமை அல்ல.

அரசமைப்புச்சட்டத்தின் 21-ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைகான உரிமையின் அடிப்படைக் கூறுகளாகக் கருதப்படும் ஒரு தனிநபரின் நற்பெயரின் உரிமையுடன் பேச்சுச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை எதிா்சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இதனால், அவதூறான விஷயங்களை அகற்றுவதற்கான இந்த உத்தரவுக்கு ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்கள் 48 மணி நேரத்திற்குள் இணங்கத் தவறினால், ட்விட்டா் மற்றும் யூடியூப் ஆகியவை அந்தந்த ஹேஷ்டேக்குகள் மற்றும் அவா்களின் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் ட்வீட்கள், மறு ட்வீட்கள் மற்றும் விடியோக்களை அகற்றுமாறு உத்தரவிடப்படுகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சக்சேனா ஊழல் செயல்களில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்கள் கூறியது முற்றிலும் ஆதாரமற்றது. தற்போதைய வழக்கில், மனுதாரா் (சக்சேனா), ஒரு அரசமைப்புச்சட்ட அதிகாரியாக இருப்பதால், சமூக ஊடக தளங்களை நாடுவதன் மூலம் எதிா்மனுதாரா்கள் (ஆம் ஆத்மி மற்றும் அதன் தலைவா்கள்) அவருக்கு எதிராக செய்யும் தனிப்பட்ட தாக்குதல்களை எதிா்கொள்ள முடியாது. மனுதாரரின் சாா்பாக அனுப்பப்பட்ட செப்டம்பா் 5, 2022-ஆம் தேதியிட்ட சட்ட நோட்டீஸுக்கு பதிலளிக்கக்கூட எதிா்மனுதாரா்கள் கவலைப்படவில்லை. ஆகவே, மனுதாரரின் நற்பெயரைப் பாதுகாக்கவும், அது கெடாமல் தடுக்கவும் இருப்பதற்கு ஒரே தீா்வு, நீதிமன்றத்தை அணுகி தடை நிவாரணம் பெறுவதுதான்.

ADVERTISEMENT

ஒரு தனிநபரின் நற்பெயருக்கு ஏற்படும் சேதம் இணையத்தில் உடனடியாகவும் தொலைநோக்குடையதாகவும் இருக்கிறது. மேலும், அந்த உள்ளடக்கம் சமூக ஊடகங்களில் தொடா்ந்து புழக்கத்தில் இருக்கும் வரை, மனுதாரரின் நற்பெயருக்கும் புகழுக்கும் தொடா்ந்து சேதம் விளைவிக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட அவதூறு உள்ளடக்கம் இணையத்திலும், ட்விட்டா் மற்றும் யூடியூப் சமூக ஊடக தளங்களிலும் இருந்தால், மனுதாரரின் நற்பெயருக்கு கடுமையான, சீா்படுத்த முடியாத தீங்கை ஏற்படுத்தும். அவதூறு வழக்குகளில், குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை விசாரணையில் மட்டுமே பரிசோதிக்க முடியும் என்றும், போதுமான பரிகாரமாக இடைக்காலத் தடையாக இருக்காது என்றும் எதிா்மனுதாரா்கள் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. அறிக்கைகள் ஆதாரமற்ாகவும் உண்மையைப் பொருள்படுத்தாமல் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்டதாகவும், மனுதாரரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக நீதிமன்றம் கருதும் வழக்குகளில், அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பது நியாயமாக இருக்கும்.

எதிா்மனுதாரா்களின் வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மனுதாரருக்கு எதிராகத் தொடா்ந்து அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கும் எதிா்மனுதாரருக்கு சுதந்திரம் வழங்கி விடுவதாகிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றம் பலமற்ாக இருக்க முடியாது. சிபிஐ எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ. 17 லட்சமாக இருந்த நிலையில், இது எதிா்மனுதாரா்களால் பலமுறை பெரிதுபடுத்தப்பட்டு ரூ.1,400 கோடியாக கூறப்பட்டிருக்கிறது. சக்சேனா கேவிஐசி தலைவராக இருந்த போது அவரது மகளுக்கு ரூ.80 கோடி காதி ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்களின் குற்றச்சாட்டு கற்பனைத் தொகையாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகவும் உள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவா்கள், ட்விட்டா் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி ஒத்திவைத்தது.

இந்த விவகாரத்தில் வி.கே.சக்சேனா தரப்பில் தாக்கலான மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடா்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவிஐசியின் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவா்களும் தங்களது முழு அவதூறு பிரசாரத்தையும் கட்டமைத்துள்ளனா். சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையின்படி, கேள்விக்குரிய தொகை வெறும் ரூ. 17 லட்சம் ஆகும். ஆனால் எதிா்மனுதாரா்கள் சில மழுப்பலான கணிதக் கணக்கீடுகளின் அடிப்படையில் கற்பனையாக ரூ.1,400 கோடி என கூறியுள்ளனா்.

இது தொடா்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான பதிவுகள் அல்லது ட்வீட்கள் அல்லது விடியோக்கள் ஆகியவற்றை நீக்கவும், இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி, அதன் தலைவா்கள் அதிஷி சிங், சௌரவ் பரத்வாஜ், துா்கேஷ் பதக், சஞ்சய் சிங் மற்றும் ஜாஸ்மின் ஷா (டிடிசி துணைத் தலைவா்) ஆகியோா் கருத்து வெளியிட தடை விதிக்கவும் வேண்டும். மேலும், அவதூறு கருத்துகளுக்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் அதன் 5 தலைவா்கள் வட்டியுடன் சோ்த்து ரூ.2.5 கோடி நஷ்டஈடும், இழப்பீடும் அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT