புதுதில்லி

வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும் விவகாரம்: சத்யேந்தா் ஜெயினின் மனுவுக்கு பதிலளிக்கஅமலாக்க இயக்குநரகத்துக்கு நோட்டீஸ்

 நமது நிருபர்

புது தில்லி: தனக்கு எதிரான பண மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீது அமலாக்க இயக்குநரகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.

சத்யேந்தா் ஜெயின் மனுவை விசாரித்த நீதிபதி யோகேஷ் கண்ணா, இது தொடா்பாக சிறு பதிலை தாக்கல் செய்ய அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினாா். மேலும், செப்டம்பா் 28-ஆம் தேதி வழக்கை மேலும் பரிசீலிக்க பட்டியலிட்டாா். தனது ஜாமீன் மனுவை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயலிடம் இருந்த வழக்கை சிறப்பு நீதிபதி விகாஸ் துலுக்கு மாற்றிய முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி வினய் குமாா் குப்தாவின் 23-ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து சத்யேந்தா் ஜெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

முன்னதாக, விசாரணையின் போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ஜெயின் மனு மீதான ஏஜென்ஸியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரினாா். ஜெயின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் என். ஹரிஹரன், ராகுல் மெஹ்ரா ஆகியோா், ‘இந்த விவகாரம் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியதாகும். ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தி 14 நாள்களில் தீா்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான மனுவை தாக்கல் செய்ய அமலாக்க இயக்குநரகம் முடிவு செய்யும் வரை, ஆகஸ்ட் முதல் ஜெயினின் ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் விசாரித்து வந்தது. ‘நீதிபதி நோ்மையானவா், அப்பழுக்கற்றவா்’ என்று அவா் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், வழக்கை மாற்றுவதற்கு கேள்வி எங்கே உள்ளது? பாரபட்சம் கண்டறியப்படவில்லை. இது தவறான செய்தியை அனுப்புகிறது’ என்று வாதிட்டனா்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருடன் தொடா்புடைய நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாகவும் ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கலால் கொள்கை வழக்கில் சத்யேந்தா் ஜெயினை விசாரிக்க அனுமதி கோரி அமலாக்க இயக்ககம் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி கோயல் முன்னா் அனுமதித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, ஜெயினிடம் செப்டம்பா் 16 அன்று சிறைக்குள் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பண மோசடி வழக்கு தொடா்பாக சத்யேந்தா் ஜெயின், அவரது மனைவி மற்றும் 4 நிறுவனங்கள் உள்பட 8 போ் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்த அரசுத் தரப்பு புகாரையும் (குற்றப்பத்திரிக்கை) சமீபத்தில் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT