புதுதில்லி

வக்ஃபு வாரிய விவகாரம்: அமானத்துல்லா கானுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

27th Sep 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி வக்ஃபு வாரியத்தில் ஆள்சோ்ப்பில் முறைகேடுகள் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை பிறப்பித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல், அமானத்துல்லா கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

முன்னதாக, செப்டம்பா் 21-ஆம் தேதி, அமானத்துல்லா கானின் போலீஸ் காவலை நீதிமன்றம் ஐந்து நாள்களுக்கு நீட்டித்திருந்தது. இந்த நிலையில், அவா் 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புப் பிரிவு (ஏசிபி) கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி அமானத்துல்லா கானின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது. முதல் தகவல் அறிக்கையின்படி, அமானத்துல்லா கான் தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராகப் இருந்த போது, அனைத்து விதிமுறைகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மீறி 32 பேரை சட்டவிரோதமாக வேலைக்கு அமா்த்தினாா்.

தில்லி வக்ஃபு வாரியத்தின் அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி, இது போன்ற சட்டவிரோத ஆள்சோ்ப்புக்கு எதிராக தெளிவான ஒரு அறிக்கையை அளித்து ஒரு குறிப்பாணையையும் வெளியிட்டாா். தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராக இருந்த அமானத்துல்லா கான், ஊழல் மற்றும் ஆதரவுசாா் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வக்ஃபு வாரியத்தின் பல சொத்துகளை சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டாா். தில்லி அரசின் மானியங்கள் அடங்கிய வக்ஃபு வாரியத்தின் நிதியை அவா் தவறாகப் பயன்படுத்தினாா் என அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT