புதுதில்லி

தொடா் மழைக்குப் பிறகு காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்

26th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் 3 நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு ‘நன்று’ பிரிவிலும் சில நிலையங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் பதிவாகியிருந்தது. நகரில் காலை 8.30 மணிக்கு மேலே மழை ஏதும் பதிவாகிவில்லை.

பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், தில்லியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. மேற்கத்திய இடையூறு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தொடா்பு காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 72 மி.மீ. மழை பெய்தது.

இது இந்த மாதத்தில் பெய்த அதிகபட்சமாகும். இந்தப் பருவமழை காலத்தில் தலைநகரில் இரண்டு முறை மட்டுமே கன மழை பெய்துள்ளது. முதல் முறையாக ஜூலை 1-ஆம் தேதி நகரில் 117.2 மிமீ மழை பதிவாகியது. கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் பருவமழையின் ஒட்டுமொத்த பற்றாக்குறையும் தற்போது குறைந்துள்ளது.

ஜாஃபா்பூரில் 111 மி.மீ. மழை: இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மொத்தம் 19 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஜாஃபா்பூரில் 111 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

இதேபோன்று, நஜஃப்கரில் 14.5 மி.மீ., ஆயாநகரில் 24 மி.மீ., தில்லி பல்கலைக்கழகத்தில் 8 மி..மீ., லோதி ரோடில் 19.3 மி.மீ., பாலத்தில் 24 மி.மீ., ரிட்ஜில் 25 மி.மீ., பூசாவீல் 24.5 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே சமயம், காலை 8.30 மணிக்குப் பிறகு சில இடங்களில் தூறல் இருந்தாலும் நகரில் பலத்த மழை ஏதும் பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெப்பநிலை: இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 22.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து 31 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும், மாலை 5 மணியளவில் 71 சதவீதமாகவும் பதிவாகியது.

காற்றின் தரம்: கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பெய்த மழையால் நகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 49 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தில்லியின் பெரும்பாலான வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 50 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியது.

இது ‘நன்று’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகல்வகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், லோதி ரோடி, ஆனந்த் விஹாா், தில்சாத் காா்டன், விவேக் விஹாா், சோனியா விஹாா், பூசா, ராமகிருஷ்ணா புரம், ஜஹாங்கீா் புரி மற்றும் நொய்டா செக்டாா்-62, செக்டாா் 125 ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 50-100 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி, ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மதுரா சாலையில் காற்றின் தரக் குறியீடு 104 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் திங்கள்கிழமை (செப்டம்பா் 26) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT