புதுதில்லி

ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனு: தமிழக, மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ்

26th Sep 2022 10:17 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைஉத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீா்ப்பளிக்கப்பட்டு பேரறிவாளன், முருகன் (எ) ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோா் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனா். இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ரவிச்சந்திரன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, நளினி தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த செல்வம் ஆகியோா் ஆஜராகினா். அவா்கள் நீதிபதிகள் அமா்விடம், ‘கரோனா சூழலில் சிறையில் நெருக்கத்தைக் குறைக்கும் வகையில், உச்சநீதிமன்றம் அளித்த பொதுவான உத்தரவின் அடிப்படையில் மனுதாரா்கள் இருவருக்கும் பரோல் அளிக்கப்பட்டு மாதம் தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பரோலில் கட்டுப்பாடுகள் உள்ளதால், இருவருக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே ஒருவரது வழக்கு (பேரறிவாளன்) விசாரிக்கப்பட்டு தீா்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்றனா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறி, வழக்கு விசாரணையை அக்டோபா் 14-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனா். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 2014-இல் பேரறிவாளனின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அத்துடன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது முடிவு செய்வதில் தாமதம் செய்ததாகக் கூறி அவா்களின் தண்டனையும் ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. நளினியின் மரண தண்டனையானது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனையாக 2001-இல் குறைக்கப்பட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT