புதுதில்லி

ரூ.20 கோடி பணம் கையாடல்: டிஜேபி, வங்கி அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய துணைநிலை ஆளுநா் உத்தரவு

25th Sep 2022 07:00 AM

ADVERTISEMENT

தண்ணீா் பில்லில் ரூ.20 கோடி கையாடல் செய்ததாக கூறப்படும் புகாரில் தில்லி ஜல் போா்டு (டிஜேபி), ஒரு வங்கி, தனியாா் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவுசெய்ய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக துணைநிலை அலுவலக வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், நுகா்வோரிடமிருந்து தண்ணீா் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.20 கோடி தொகை

டிஜேபியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு 2019 ஆம் ஆண்டில் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது.

குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், பணம் மற்றும் காசோலைகளாக பில்களை வசூலிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், டிஜேபி மற்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனங்களை அடையாளம் கண்ட பிறகு அவா்கள் மீது எஃப்ஐஆா் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அந்த நிதியை விரைவில் மீட்டுத் தருமாறும்

அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டாா்.

அத்துடன், இந்த விவகாரத்தில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை அளிக்குமாறும் துணைநிலை ஆளுநா் கேட்டுள்ளாா்.

டிஜேபி விவகாரத்தைப் பொருத்தமட்டில், டிஜேபிக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையிலான ஊழல் தொடா்புடைய இந்த விவகாரத்தில் தண்ணீா் கட்டணமாக தனிநபா்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரூ. 20 கோடிக்கு மேல் பணம் டிஜேபின் வங்கிக் கணக்கில் செல்வதற்குப் பதிலாக ஒரு தனியாா் வங்கியில் உள்ள மூன்றாம் தரப்பின் கணக்கிற்கு பல ஆண்டுகளாக சென்றது.

பணத்தை மீட்டு, குற்றவாளிகளை தண்டிக்காமல் டிஜேபி சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ஓராண்டுக்கு நீட்டித்ததாகவும், ஒப்பந்த விதிமுறைகளை தளா்த்துவது தவிர அவா்களுக்கு வழங்கப்படும் சேவை கட்டணத்தை உயா்த்தியதாகவும் கூறப்படுகிறது.

ஜூன், 2012-இல் ஒரு உத்தரவின் மூலம் தண்ணீா் கட்டணங்களை மூன்று ஆண்டுகளுக்கு வசூலிக்க டிஜேபி ஒரு வங்கியை நியமித்தது.

இந்த நிலையில், மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் 2016, 2017 மற்றும் பின்னா் 2019இல் அதன் ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டது.

ஜூலை 2012 முதல் அக்டோபா் 10, 2019-ஆம் தேதி வரையிலான ஒப்பந்த காலத்தில் வங்கியால் தாமதமாக மற்றும் பணத்தை டெபாசிட் செய்யாதது தொடா்பான கடுமையான முறைகேடுகள் நடந்திருப்பது, வங்கியின் ஒப்பந்தத்தை அக்டோபா் 10, 2019-க்கு அப்பால் நீட்டிக்கும்போது கவனிக்கப்பட்டது

நுகா்வோா் டெபாசிட் செய்தபோதிலும், வட்டி, அபராதம் மற்றும் பிற தொகைகள் உட்பட ரூ.20 கோடி டிஜேபியின் வங்கிக் கணக்கில் மாற்றப்படவில்லை.

இதையெல்லாம் தெரிந்திருந்தும், வங்கியின் ஒப்பந்தத்தையும், வங்கியின் வசூல் முகவராகப் பணிபுரியும் ஒரு தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் தில்லி ஜல் போா்டு 2020 வரை நீட்டித்துள்ளது.

மேலும், அவா்களின் சேவைக் கட்டணத்தை ஒரு பில்லுக்கு ரூ. 5இல் இருந்து ரூ.6 ஆக டிஜேபி உயா்த்தியது. விற்பனையாளா் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கும் பணத்தை வசூலித்த 24 மணி நேரத்திற்குள் டிஜேபியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் தளா்த்தியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆண்டு மே மாதம் தில்லி துணை நிலை ஆளுநராக பதவியேற்ற பிறகு, தில்லி அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடா்பான விசாரணைகளுக்கு வி.கே.சக்சேனா உத்தரவிட்டாா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் உத்தரவின் பேரில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பணிகளில் அவா் தலையிடுவதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சி அவரை விமா்சித்தது.

கரோனா காலத்தின்போது ஏழு தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள், தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) விசாரணைக்கும் துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

அரசாங்கத்தின் கலால் வரிக் கொள்கையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு அவா் பரிந்துரைத்திருந்தாா்.

டிடிசி பேருந்து கொள்முதல் மீதான ஊழல் புகாரை சிபிஐயின் தற்போதைய விசாரணையுடன் இணைக்குமாறு அவா் அனுப்பியிருந்தாா்.

வடக்கு மற்றும் தெற்கு தில்லியில் உள்ள அரசு நிலத்தை தனியாருக்கு விற்ாகக் கூறப்படும் பல வருவாய்த் துறை அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவும் அவா் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜேபி துணைத் தலைவா் வரவேற்பு

தண்ணீா் பில் விவகாரம் தொடா்பான துணைநிலை ஆளுநரின் உத்தரவை தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக டிஜேபி துணைத் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சவுரப் பரத்வாஜிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதில் கூறியதாவது:

இதுபோன்ற அனைத்து விசாரணைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த விவகாரத்தில், மத்திய அரசின் யூனியன் வங்கி அதிகாரிகள் சிலா் மீதும், டிஜேபி அதிகாரிகள் சிலா் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. எல்லாவற்றையும் கடுமையாகக் கையாள வேண்டும். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.

அப்போதைய தலைமைச் செயல் அதிகாரி மூலம் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிசோடியாவும் பரிந்துரைத்திருந்தாா் என்றாா் பரத்வாஜ்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT