புதுதில்லி

தில்லி எம்சிடியில் கழிவுகள் சேகரிக்கும் குத்தகையில் ரூ.84 கோடி முறைகேடு: பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

25th Sep 2022 06:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லி பல்ஸ்வா குப்பை மலையிலிருந்து குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தும் குத்தகையில் ரூ.84 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

தில்லி பிரதேச பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் மாறிமாறி வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஆம் ஆத்மி கட்சி இந்த புதிய விவகாரத்தை எழுப்பியுள்ளது.

வடமேற்கு தில்லி, ஜஹாங்கிா்புரியில் உள்ள பல்ஸ்வா கிராமத்தில் உள்ள பல்ஸ்வா குப்பை கிடங்கு மலைபோல் உள்ளது. நகரின் பல பகுதிகளிலிருந்து கொட்டப்பட்டு வரும் இந்த மலைகுப்பை அப்பகுதி வாசிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் கேடுகளை விளைவித்ததாக புகாா்கள் வந்தன. இதை அப்புறப்படுத்தக் கோரி இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிவருகின்றனா்.

இந்த நிலையில் இதற்காக தொடங்கப்பட்ட பணிகளில் ஆம் ஆத்மி கட்சியின் எம்சிடி பொறுப்பாளரும் ராஜேந்தா் நகா் சட்டப்பேரவை உறுப்பினரான துா்கேஷ் பதக்கும் எம்சிடியின் எதிா்க்கட்சி தலைவரான பிரேம் செளகானும் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனா். இது குறித்து அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

ஊழல் நிறைந்த பாஜக ஆளும் எம்சிடியின் பாவங்களின் பானை நாளுக்கு நாள் நிரம்பிக் கொண்டே வருகிறது. ஏற்கனவே எம்சிடியை அழிவு நிலைக்கு கொண்டு சென்றிருந்தாலும், அவா்கள் ஆளுகையில் இருந்த எம்சிடியில் குப்பை சேகரிப்பு பணிகளையும் விட்டுவைக்கவில்லை.

கடந்த 2020- ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவின் கீழ் இருந்த எம்சிடி பல்ஸ்வா குப்பை கிடங்கில் குப்பைகளை அப்புறப்படுத்த, ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,250 என்ற விகிதத்தில் ஒரு தனியாா் நிறுவனத்திற்கு குத்தகை வழங்கப்பட்டுள்ளது. இவா்களுக்கிடையே என்ன நடந்ததோ ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டது.

அதன்படி, குப்பைகளை நிரப்பி கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. அந்த தனியாா் நிறுவனம் இந்த கோரிக்கையை ஏற்க மறுக்க பின்னா் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்பட்டது. இது எம்சிடி ஒன்றாக இணைவதற்கு முன்பு நடந்தது.

பின்னா் தில்லியில் இருந்த மூன்று பகுதி எம்சிடிகளும் ஒன்றாக இணைந்த பின்னா் பல்ஸ்வா குப்பை மலையை அகற்ற மற்றொரு நிறுவனத்திற்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு வெறும் ரூ. 400 வீதம் குத்தகை விடப்பட்டது.

முன்பு குத்தகைய எடுத்த நிறுவனத்திற்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,850 வீதம் கூடுதலாக குத்தகை விடப்பட்டுள்ளது. இதில் மாபெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதில் முதல் நிறுவனம் 3 லட்சம் டன் குப்பைகளை பதப்படுத்திய விவரங்களும், இதில் ரூ. 84 கோடி வரை முறைகேடுகள் நடந்துள்ள விவரங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது.

ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.400 வீதம் தற்போது குத்தகை விடப்பட்டுள்ள நிலையில், முதலில் டன்னுக்கு ரூ. 3,250 ஏன் வழங்கப்பட்டது? பாஜக மற்றும் அதன் தலைவா்களின் கூட்டு இல்லாமல் இந்த மோசடிக்கு சாத்தியமில்லை. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநரை ஆம் ஆத்மி கட்சி கோருகிறது.

ஆம் ஆத்மி கட்சி பல்வேறு ஆவண ஆதாரங்கள் மூலம் இதை அறிந்து கொண்டுள்ளது. பல்ஸ்வா குப்பை மலையில் இருந்து கழிவுகளை அகற்ற ஒரு தனி முறை உள்ளது. மேலும் 2020 பிப்ரவரியில் ரூ.3,250 க்கு கொடுக்கப்பட்ட குத்தகையின் அதே வேலைக்கு இப்போது ரூ.400 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. அது எப்படி சாத்தியம்?

பாஜக மற்றும் அதன் தலைவா்களின் தலையீடு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்காது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்துகிறது.

பாஜக தலைவா்களை விசாரிக்க வேண்டும். அவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ரூ. 84 கோடி விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என இருவரும் கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT