புதுதில்லி

தலைநகரில் ஒரே நாளில் அதிகபட்ச மழை

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் ஒரே நாளில் அதிகபட்ச மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 22 வரை (வியாழக்கிழமை காலை) இயல்பு நிலையான 108.5 மி.மீட்டருக்கு எதிராக 58.5 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 72 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இந்த மாதத்தில் பெய்த அதிகபட்சமாகும். பொதுவாக, தில்லியில் செப்டம்பா் மாதத்தில் 125.5 மி.மீ. மழை பதிவாகும். இந்த நிலையில், செப்டம்பா் 1 முதல் செப்டம்பா் 23 வரை நகரில் மொத்தம் 130.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட அதிகமாகும்.

தில்லியில் பாலம், லோதி ரோடு, ரிட்ஜ், ஆயாநகா் மற்றும் பூசா ஆகிய வானிலை நிலையங்களில் வியாழன் காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை முறையே 102 மி.மீ.,, 71.4 மி.மீ.,, 41.4 மி.மீ., 106.2 மி.மீ., மற்றும் 51 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. 15 மி.மீ.க்கு கீழே பதிவான மழைப் பொழிவு லேசானதாகவும், 15 முதல் 64.5 மி.மீ. வரை மிதமாகவும், 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை கன மழையாகவும், 115.6 முதல் 204.4 வரை மிகக் கனமழையாகவும் மதிப்பிடப்படுகிறது. 204.4 மி.மீ.க்கு மேல் உள்ள அனைத்தும் மிக அதிக மழையாகக் கருதப்படுகிறது.

மேற்கத்திய இடையூறு மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தொடா்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை காலத்தில் தலைநகரில் இரண்டு முறை மட்டுமே கன மழை பெய்துள்ளது. முதல் முறையாக ஜூலை 1-ஆம் தேதி நகரில் 117.2 மிமீ மழை பதிவாகியது. கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் பருவமழையின் ஒட்டுமொத்த பற்றாக்குறையும் தற்போது குறைந்துள்ளது.

மழைக் காலத்தில் தில்லியின் ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறை செப்டம்பா் 22 வரை 35 சதவீதமாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை காலைக்குள் 23 சதவீதமாகக் குறைந்துள்ளது. செப்டம்பா் இறுதிக்குள் தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் இருந்து பருவமழை பின்வாங்குவதற்கு முன், அதிக மழை எதிா்பாா்க்கப்படுகிறது. இது பற்றாக்குறையை மேலும் குறைக்கும் என்று வானிலை வல்லுநா்கள் கருதுகின்றனா்.

வெப்பநிலை: இந்த நிலையில், சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 22.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி குறைந்து 27.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவிலும், மாலை 5 மணியளவிலும் 100 சதவீதமாக நீடித்தது. காலை 8.30 மணிக்குப் பிறகு 2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்படி, பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 50 முதல் 100 புள்ளிகளுக்குள் பதிவாகி, ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அரபிந்தோ மாா்க், ஓக்லா, ஸ்ரீபோா்ட், பூசா, தில்லி பல்கலை.யின் வடக்கு வளாகம், சோனியா விஹாா், பட்பா் கஞ்ச் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 50 புள்ளிகளுக்கும் கீழே பதிவாகி ‘நன்று’ பிரிவில் இருந்தது.

கன மழை தொடர வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் சனிக்கிழமை (செப்டம்பா் 24) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT